லாடனேந்தல்- - பெத்தானேந்தல் பாலப்பணி மந்தம்
திருப்புவனம் லாடனேந்தல் - பெத்தானேந்தல் பாலம் கட்டுமான பணி மந்த நிலையில் நடப்பதோடு கண்காணிப்பு எதுவும் இல்லாததால் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. மணல்மேடு,பெத்தானேந்தல்,சடங்கி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளி, கல்லுாரி செல்ல, விவசாய பொருட்கள் வாங்க திருப்புவனத்திற்கு மடப்புரம் வழியாக 10கி.மீ., சுற்றி வரவேண்டும், வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்தால் மூன்று கி.மீ., துாரத்தில் கடந்து விடலாம் என்பதால் பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து நபார்டு வங்கி நிதியுதவியுடன் 2022 ஜூலையில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின. 18கோடியே 70லட்ச ரூபாய் செலவில் பாலம் அமைக்கப்படும் என தெரிவித்தனர். மூன்று ஆண்டு கடந்தும் பாலம் கட்டுமான பணி நிறைவு பெறவே இல்லை. பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்தாலும் லாடனேந்தல் கிராமத்தினுள் 100 மீட்டர் துாரத்திற்கு குறுகிய அகலம் கொண்ட பாதை தான் உள்ளது. எனவே இருபுறமும் கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே பாலத்தை பயன்படுத்த முடியும். மேலும் லாடனேந்தல் தேசிய நெடுஞ்சாலை வரை நேர் பாதையாக அமைக்காமல் குறுகிய வளைவுடன் பாதையை அமைத்து வருகின்றனர். இதில் நான்கு சக்கர வாகனங்கள் திரும்பவே முடியாது. அதே போல பெத்தானேந்தல், மணல்மேடு ஆகிய கிராமங்களுக்கு திரும்பும் பாதையை கால்வாயினுள் அமைத்துள்ளனர். பாதையை அகலப்படுத்தாமல் பணிகள் நடந்து வருகின்றன. பாலத்தில் நடைபெறும் பணிகளுக்கு மோட்டார் வைத்து தண்ணீர் ஊற்றாமல் குடத்தில் அருகில் உள்ள சுடுகாடு தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பாலம் கட்டுமானம் உறுதியாக இருக்க வாய்ப்பில்லை. மாவட்ட நிர்வாகம் பாலப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.