தாயமங்கலத்தில் மண்டபம் பக்தர்கள் வேண்டுகோள்
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள்பிரகாரத்தில் மண்டபம் கட்ட வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனியில் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இந்த விழாவின் போது பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி செல்வர்.கோயிலில் உள் பிரகாரத்தில் மண்டப வசதி இல்லாத காரணத்தினால் பக்தர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திருவிழா காலங்களில் மட்டும் தகரங்களைக் கொண்டு தற்காலிகமாக கொட்டகை அமைத்து வருகின்றனர்.இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ஆகவே ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பக்தர்களின் நலன் கருதி உடனடியாக கோயிலின் உட்பிரகாரத்தில் கல் மண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.