உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆயிரம் கிளிகளுக்கு தினம் உணவு அளிக்கும் மெக்கானிக் கீ...கீ... சத்தத்துடன் கிளிகள் குதுாகலம்

ஆயிரம் கிளிகளுக்கு தினம் உணவு அளிக்கும் மெக்கானிக் கீ...கீ... சத்தத்துடன் கிளிகள் குதுாகலம்

சிவகங்கை:சிவகங்கை மெக்கானிக் முனியாண்டி 56, தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு அரிசி, பழம், மக்காச்சோளத்தை உணவாக அளிக்கிறார்.சிவகங்கை அருகே பையூரைச் சேர்ந்த இவர் விவசாய மின் மோட்டார் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பையூர் அருகே ஏற்கனவே அதிகளவில் இருந்த பனை மரங்களில் கிளிகள் வளர்ந்தன. காலப்போக்கில் பனை மரங்களை வெட்டிவிட்டனர். கிளிகள் தங்குமிடமின்றி தவித்தன. 18 ஆண்டுக்கு முன்பே பையூர் சந்தனத்தேவர் கண்மாய் கரையில் ஆலமரம் நட்டு வைத்தார். இம்மரத்தில் கிளிகள் தங்க துவங்கின.கிளிகள் தங்க மரம் வளர்த்த முனியாண்டி சில மாதங்களாக அவற்றிற்கு உணவு அளிக்க விரும்பினார்.ஆலமரத்தை சுற்றி பலகை அமைத்து அதில் அரிசி, பழங்கள், மக்காச்சோளத்தை வைத்து கிளிகளுக்கு வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் தினமும் 50 முதல் 100 கிளிகள் மட்டுமே வந்தன. தற்போது தினமும் இங்கு வரும் கிளிகளின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்து விட்டது. இதனால், காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை பையூர் கண்மாயை கடந்து செல்வோருக்கு 'கீ... கீ...' என பச்சை கிளிகளின் சப்தம் அதிகளவில் கேட்டு வருகின்றன.

தினமும் 1000 கிளிகளுக்கு சாப்பாடு

முனியாண்டி கூறியதாவது: தினமும் அதிகாலை 5:45 மணிக்கு பையூர் கண்மாய் கரையில் உள்ள ஆலமரத்திற்கு வந்து 'விசில்' அடிப்பேன். இது கிளிகளுக்கு நான் தரும் சிக்னல். 'விசில்' அடித்த சில நொடிகளில் நுாற்றுக்கணக்கான கிளிகள் பறந்து வந்து, நான் வைத்த பலகையில் அமர்ந்து உணவை எடுக்கும்.பறவைக்கு மனிதர்களை உணரும் சக்தியும், பாசமும் உண்டு. ஆரம்பத்தில் என்னிடம் நெருங்க அஞ்சிய கிளிகள், இன்றைக்கு நான் 'சிக்னல்' கொடுத்ததும் பறந்து வந்து நான் தரும் உணவை சாப்பிட்டு செல்லும். மெக்கானிக் பணி மூலம் கிடைக்கும் வருவாயில் தான் இச்சேவையை செய்கிறேன். இது எனக்கு முழு மன திருப்தி, ஆனந்தம் தருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

David DS
டிச 03, 2024 13:23

கேனத் தனமான செயல். இவரால் இரண்டு நாட்கள் உணவு வைக்க முடியாமல் போனால் அத்தனை கிளிகளும் இறந்து விடும்.


Subramanian
நவ 30, 2024 07:20

வாழ்த்துகள், பாராட்டுகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை