சகதியில் தவிக்கும் வாகன ஓட்டிகள்: சாலை, கால்வாய் வசதியின்றி அவதி
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள இலுப்பக்குடி அழகப்பர் சாலை,பொன் நகர் பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இலுப்பக்குடி ஊராட்சி தற்போது காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.முக்கிய பகுதியாக பொன் நகர் உள்ளது. இங்குள்ள அழகப்பர் சாலையில் 16 க்கும் மேற்பட்ட குறுக்கு தெருக்கள் உள்ளன. தவிர, பொன் நகர் திருமலை அவென்யூ வீதிகள், லட்சுமி நகர் உள்ளன. இங்கு அடிப்படை வசதியான சாலைகளோ, கழிவுநீர்க் கால்வாய்களோ இல்லை. குடியிருப்போர் கூறுகையில்: வீடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலை அமைக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. தவிர சாக்கடை கால்வாய் வசதியும் இல்லை. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சாலை சகதிக்காடாக காட்சியளிக்கிறது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சகதியில் சிக்கி கீழே விழுகின்றனர். போதிய தெரு விளக்குகளும் இல்லை. மக்கள் அச்சத்துடன் வெளியில் வர வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சகதியான வைகை கரைகள் மானாமதுரை: மானாமதுரையில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ரோடு அமைக்காததால் மழைக்காலங்களில் சகதியில் சிக்கி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மானாமதுரையில் வைகை ஆறு நகரின் குறுக்கே செல்கிறது, நகர் பகுதிக்கு அருகே பனிக்கனேந்தல் பகுதியில் 15 வருடங்களுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்ட போது நகர் பகுதியில் ஆற்றில் இரு கரைகளிலும் ரோடு அமைப்பதற்காக கரைகள் உயர்த்தப்பட்டு இரு புறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில் ரோடு பணி துவங்கவில்லை. தற்போது மழை பெய்வதால் இருபுறங்களிலும் கரையின் மேற்பரப்பு சேரும்,சகதியுமாக மாறி விட்டது. இரு கரைகளை சேர்ந்த மக்களும் ஆற்றைக் கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ரோடு அமைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.