உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு அலுவலகங்கள் கட்ட இடம் கிடைக்காமல் ஆக்கிரமிப்பு: பைலை துாசி தட்டினால் விமோசனம்

அரசு அலுவலகங்கள் கட்ட இடம் கிடைக்காமல் ஆக்கிரமிப்பு: பைலை துாசி தட்டினால் விமோசனம்

வேகமாக வளரும் தொழில், வர்த்தக நகரானசிங்கம்புணரி, தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டும் பல்வேறு அரசு அலுவலகங்கள் கட்ட இடம் கிடைக்காமல் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது. வட்டார கல்வி அலுவலகம் தொடக்கப் பள்ளி எண் 2ல் வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறது. கருவூல அலுவலகத்திற்கு இடம் கிடைக்காமல் தனியார் கட்டடத்தில் இயங்குகிறது.திண்டுக்கல் ரோட்டில் செயல்பட்டு வந்த மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்பட்ட பிறகு எப்போது வேண்டுமானாலும் இடிக்கப்படலாம் என்ற நிலையிலுள்ளது. இதனால்தங்கள் துறைக்கும் சொந்த கட்டடம் இல்லை என அத்துறையினர் புலம்புகின்றனர். ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, அங்கன்வாடி மைய அலுவலகங்கள் பாழடைந்த கட்டடத்தில் இட நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. அவற்றிற்கும் முறையான கட்டடங்கள் இல்லை. இப்பகுதிக்கு பஸ் டிப்போ அமைக்க முடிவு செய்யப்பட்டபோது இடம் கிடைக்காத நிலையில் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் செயல்பட்டு வரும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு கட்டடம் கட்ட ஏற்பாடு நடந்து வரும் நிலையில் இன்னும் போதிய இடம் கிடைக்கவில்லை. அரசு இயந்திரம் முறையாக செயல்பட அலுவலக கட்டடங்களுக்கு இடம் கிடைக்காமல் அலுவலர்கள் அலைமோதி வரும் நிலையில் நகரில் பல இடங்களில் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவை பற்றி புதிதாக வரும் அதிகாரிகளுக்கு தெரிவதில்லை. ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஆவணங்களுக்கும் மட்டுமே தெரியும் வகையில் அவை மறைக்கப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டால் அனைத்து அலுவலகங்களுக்கும் கட்டடம் கட்ட இடம் கிடைக்கும். இதற்கிடையில் ஒன்றிய அலுவலகம் பின்புறம் ஒரு காலத்தில் முந்திரி காடாக இருந்த இடம் தற்போது காலியிடமாக ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒன்றிய அலுவலகத்தைச் சுற்றி கூடுதல் தளங்களுடன் ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகத்தை கட்டினால் அனைத்து அலுவலகத்தையும் ஒரே இடத்தில் செயல்படுத்த முடியும். இந்த இடம் நகரின் மையப்பகுதியில் இருப்பதால் அனைத்து பகுதி மக்களும் அலுவலங்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.ஆ.முத்துப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி: சிங்கம்புணரி வட்டார கல்வி அலுவலகத்திற்கு சொந்தமாக அலுவலக கட்டடம் கட்டுவதற்கு 30 ஆண்டுகளாக இடம் கேட்டு வருகிறோம். பேரூராட்சி நிர்வாகத்தை ஏற்று நடத்தும் இரண்டு பெரிய கட்சிகளும் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு இடம் ஒதுக்கி தருவதாக உறுதி அளித்தும், இதுநாள் வரையில் இடம் ஒதுக்கி தரவில்லை. இதனால் தற்போது மாணவர்கள் பயிலும் பள்ளியில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் நீதிமன்றம்,சார்நிலை கருவூலம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை போன்ற அரசு அலுவலகங்களுக்கும் இடம் ஒதுக்கி தராமல் காலம் கடத்தி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த ஊரின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை