திருப்புத்துார் கோயில்களில் ஜன. 10 காலை சொர்க்க வாசல் திறப்பு
திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில், நின்ற நாராயணப் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலையில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி உற்ஸவத்தை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு நடை திறந்து மார்கழி திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெறும். அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் யோகநாராயணப் பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறும். உற்ஸவர் திருநாள் மண்டபம் எழுந்தருளி அபிஷேகம் நடந்து அலங்காரத்தில் அருள்பாலித்து தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து உற்ஸவர் பிரகாரம் வலம் வந்து கோயில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பிரவேசிப்பார். நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டு மார்கழி துவங்கியது முதல் தினசரி அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி நடைபெறுகிறது.ஜன.10 ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 8:15 மணி முதல் 9:15 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படும். மாலை 6:30 மணிக்கு சொற்பொழிவும், இரவு 7:00 மணிக்கு கருடசேவையும் நடைபெறும். மறுநாள் கூடாரவல்லி உத்ஸவத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சனம், காலை 11:00 மணிக்கு திருவாராதனம் நடைபெறும்.திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் நாளை பகல் பத்து உற்ஸவம் நிறைவடைகிறது. ஜன.10ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இரவு 10:30 மணிக்கு மேல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளி ஆழ்வாருக்கு மரியாதை நடைபெறும்.