| ADDED : நவ 22, 2025 12:22 AM
காரைக்குடி: ''மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் போல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் தன்னை நிரூபிக்கட்டும். நேற்று முளைத்த காளான் என விஜய்யை சொல்லவில்லை,'' என, காரைக்குடியில் தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி : கடலுாரில் நடக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் தே.மு.தி.க., யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம். விஜய்யை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. நேற்று முளைத்த காளான் என்று விஜய்யை குறிப்பிட்டு நான் சொல்லவில்லை. புதிதாக பலர் கட்சி தொடங்கியுள்ளனர். விஜய்யை நாங்கள் எதிர்க்கவில்லை. எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் போல், விஜய்யும் தன்னை நிரூபிக்கட்டும் என்று தான் சொன்னேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த போது ஒரு ராஜ்யசபா எம்.பி., உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதில் ஆண்டு குறிப்பிடவில்லை. நாங்கள் ஆண்டை குறிப்பிட தெரிவித்தோம். ஆண்டை குறிப்பிடும் பழக்கம் எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே இல்லை. என் வார்த்தை தான் முக்கியம், உறுதியாக தரப்படும் என்று அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ஆண்டு குறிப்பிடாததால் 2025 என நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் அவர் 2026 என்று தெரிவித்துள்ளார். அதில் தான் சிறு குழப்பம் ஏற்பட்டது. அதற்காக கூட்டணி மாறுகிறது என்று அர்த்தம் இல்லை. அது முடிந்த கதை. பழனிசாமி, முதுகில் குத்திவிட்டார் என்றும் நான் சொல்லவில்லை. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் மாநில அரசு திட்டங்களை நிறைவேற்ற முடியாது. மத்திய, மாநில அரசுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசு நிதி ஒதுக்குவது இல்லை என்று மாநில அரசு கூறுகிறது. ஆனால் ரூ.பல லட்சம் கோடி மாநில அரசுக்கு ஒதுக்கியதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. பீஹார் போல் தமிழகத்திலும் நடக்கும் என்று நாம் கூற முடியாது. தமிழகத்திற்கு வடமாநிலத்தவர் வரலாம். ஆனால் ஓட்டுரிமை என்பது அவரவர் மாநிலத்தில் தான் இருக்க வேண்டும். மதுக்கடைக்கு எதிர்ப்பு தான் தெரிவித்தோம். பூரண மதுவிலக்கு என்று கூறவில்லை என தி.மு.க.,வினர் தற்போது தெரிவிக்கின்றனர். இவ்வாறு பேட்டியளித்தார்.