| ADDED : டிச 30, 2025 05:44 AM
பூவந்தி: பூவந்தி அருகே இலுப்பக்குடியில் கிராபைட் தொழிற்சாலைக்கு விவசாய நிலத்தை கையகப் படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். பூவந்தி அருகே உள்ள இலுப்பகுடியில் நெல், வாழை, கரும்பு, தென்னை, தர்ப்பூசணி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. விவசாயம் தவிர கறவை மாடுகள், வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்டவைகளும் வளர்த்து வருகின்றனர். 2011ம் ஆண்டு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் களுக்கான பயிற்சி முகாம் அமைப்பதற்கு 400 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில் சிப்காட் அமைக்க 800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் அதிகாரிகள் கிராபைட் தொழிற்சாலை மற்றும் குப்பை கிடங்கு அமைக்க உள்ளதாக கூறி நிலத்தை அளவீடு செய்து உள்ளனர். கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கிராபைட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கலெக்டரிடம் நேரில் சென்று மனு அளித்துள்ளனர். அதிகாரிகள் கிராபைட் தொழிற்சாலைக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பத்து நாட்களாக இலுப்ப குடி ஊராட்சி அலுவலக வாசலில் கிராமமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.