உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு

காரைக்குடி மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு

காரைக்குடி,; காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் வீட்டுவரி, குடிநீர் வரி உட்பட வரி வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கின்றனர். தமிழகத்தின் மிகப்பெரிய ஊராட்சியாக இருந்த சங்கராபுரத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும், ஆண்டுக்கு ரூ. 3 கோடி வரை வருமானம் வரக்கூடிய ஊராட்சியாக இருந்தது. இதே போல் காரைக்குடியை ஒட்டி அமைந்துள்ள இலுப்பக்குடி, அரியக்குடி, கோவிலுார், தளக்காவூர் ஊராட்சிகளும் முக்கிய பகுதிகளாக உள்ளன. நகராட்சியாக செயல்பட்டு வந்த காரைக்குடியுடன் கோட்டையூர், கண்டனுார் பேரூராட்சிகள், சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி, கோவிலுார், தளக்காவூர் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஊராட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரியில் ஊராட்சிகள் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநகராட்சியுடன், ஊராட்சிகள் இணைக்கப்பட்டதால் ஊராட்சிகளின் மொத்த பணிகளும் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதனால் ஊராட்சிகளில், மேற்கொள்ளப்பட்டு வந்த வீட்டு வரி, குடிநீர் வரி உட்பட பல்வேறு வரி வசூல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் கூறுகையில்: ஊராட்சி நிர்வாகம் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு, பல மாதங்களாகியும் வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட எந்த வரியும் வசூல் செய்யவில்லை. இதனால் குடிநீர் இணைப்பு பெறுவதிலும் சிக்கல் நிலவுகிறது. தவிர தற்காலிக மின் இணைப்பு பெற்று புது வீடு கட்டி முடித்தவர்கள் வீட்டு வரி கட்டாததால் ஒரு யூனிட்டுக்கு ரூ.10 வரை அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர். வீட்டு வரி வசூல் செய்தால் அதன் மூலம், வீடுகளுக்கு உரிய குறைவான மின்கட்டணம் செலுத்த முடியும். தவிர வீட்டு ரசீதை, வைத்தே வீட்டுக் கடன் பெற முடியும். எனவே, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் முறையாக வரிவசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்: மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் பிளான் அப்ரூவல் பிரச்னை இருந்து, தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. வீட்டு வரி உட்பட வரி வசூல் முறைகளும், விரைவில் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை