| ADDED : மார் 12, 2024 06:03 AM
சிவகங்கை,: சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 15 ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்குகிறது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கும் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் மார்ச் 14 அன்று மாலை 6:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது. மார்ச் 15 அன்று காலை 8:00 மணிக்கு சுவாமி சன்னதி முன் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா துவங்குகிறது. அன்று இரவு 8:30 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 8:00 மணிக்கு சுவாமி மண்டகப்படியில் எழுந்தருளல், இரவு 8:30 மணிக்கு ரிஷபம், மயில், அன்னம், யானை,ரிஷபம்,ஆட்டுகிடாய்,குதிரை ஆகிய வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடைபெறும்.விழாவின் 9ம் நாளான மார்ச் 23ல் காலை 9:00 மணிக்கு ரதரோகணம், மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.அன்று இரவு 8:30 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள்வார். மார்ச் 24 அன்று இரவு 10 :00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு 11:00 மணிக்கு கொடி இறக்கத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. மார்ச் 25 ம் தேதி காலை சைத்தியோபசாரம், இரவு 6:30 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடைபெறும். தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில், மேலாளர் இளங்கோ, கோயில் கண்காணிப்பாளர் வேல்முருகன், கவுரவ கண்காணிப்பாளர் ராமசாமி, ஆலய ஸ்தானிகம் சந்திரசேகர குருக்கள், மண்டகப்படிதாரர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.