உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நர்சிங் கல்லுாரி மாணவிகளுக்கு கல்வி சான்று வழங்காமல் இழுத்தடிப்பு பெற்றோர் கலெக்டரிடம் புகார்  

நர்சிங் கல்லுாரி மாணவிகளுக்கு கல்வி சான்று வழங்காமல் இழுத்தடிப்பு பெற்றோர் கலெக்டரிடம் புகார்  

சிவகங்கை: மானாமதுரையில் தனியார் நர்சிங் கல்லுாரியில் படித்த மாணவிகளுக்கு சான்று கிடைக்காததால், பிற கல்லுாரிகளில் சேரமுடியாமல் தவிப்பது குறித்து கலெக்டரிடம் புகார் அளித்தனர். மானாமதுரையில் தனியார் நர்சிங் கல்லுாரி இயங்கி வந்தது. கடந்த 2022ம் ஆண்டு நிதிநிலை சிக்கல் மற்றும் நிர்வாக பிரச்னை காரணமாக அக்கல்லுாரி மூடப்பட்டது. இதில், 2018 முதல் 2022ம் ஆண்டு வரை ஏராளமான மாணவிகள் நர்சிங் படித்தனர். கடந்த 2022 ம் ஆண்டில் 20 மாணவிகளில், 14 பேர் தங்கள் சான்றுகளை பெற்றுக்கொண்டு பிற கல்லுாரிகளில் சேர்க்கை செய்து விட்டனர். இந்நிலையில், அங்கு படித்த காளீஸ்வரி, ருத்ரா, சுசி, எலிசபெத், மோனிஷா, அபிராமி உள்ளிட்ட 6 மாணவிகள் எம்.ஜி.ஆர்., பல்கலையின் கீழ் தேர்ச்சி பெற்றிருந்தும், சான்றுகள் வழங்கப்படாததால், தவித்து வருகின்றனர். எனவே தனியார் நர்சிங் கல்லுாரிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்களது கல்வி சான்றினை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது குறித்து மாணவிகள் பெற்றோர் கூறியதாவது, கல்லுாரி நிர்வாகம் சான்று வழங்குவதாக கூறி, ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.20 ஆயிரம் வரை வசூலித்தனர். ஆனால் இது வரை கல்வி சான்றினை வழங்கவில்லை. நாங்கள் ரூ.4 முதல் 6 லட்சம் வரை கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் மாணவிகளை படிக்க வைத்தோம். இன்றைக்கு தனியார் கல்லுாரியில் படித்ததற்கான கல்வி சான்று இன்றி, வேலைக்கு சேரவோ, மேலும் படிக்கவோ முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால், குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் புகார் அளித்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி