உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பட்டா மாறுதல் செய்தவர்கள் வரி ரசீதில் பெயர் மாற்ற முடியாமல் தவிப்பு

பட்டா மாறுதல் செய்தவர்கள் வரி ரசீதில் பெயர் மாற்ற முடியாமல் தவிப்பு

கிராம ஊராட்சிகளில் 2025 மார்ச் 31 வரை வீட்டு வரிக்கான இணைய இணைப்பில் ஊராட்சி செயலர்கள் இணைய முகவரி,கடவுச்சொல் மூலம் ஊராட்சி கணக்கை திறந்து புதிதாக வீடு கட்டி முடித்தவர்களுக்கு வீட்டுக்கான வரிக்கு ரசீது போட்டு கொடுக்க முடிந்தது. மேலும் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு வீட்டு வரி, குடி நீர் இணைப்பு ரசீதுகளில் பெயர் மாற்றம் செய்ய முடிந்தது.வீடுகளை கிரையமாக வாங்கியவர்களுக்கும் ரசீதுகளில் பெயர் மாற்றம் செய்ய முடிந்தது. ஏப்ரல் முதல் கிராம ஊராட்சிக்கான வீட்டு வரி ரசீதுக்கு பெற 'ஆன் லைன்' இணைப்பு வேலை செய்யவில்லை. செயல்படாத காரணத்திற்கான முன் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஊராட்சி செயலர்கள் இணையதள பராமரிப்பிற்காகவோ, அல்லது புதிய வரியை மேம்படுத்தவோ இருக்கலாம்' என்று நினைத்தனர். ஆனாலும் 3 மாதங்களாகியும் செயல்படவில்லை.இதனால் கிராமங்களில் புதியதாக வீடு கட்டியவர்கள் புதிய ரசீது வாங்கி, மின் இணைப்பை வீட்டிற்கான இணைப்பாக மாற்ற முடியவில்லை. கட்டட மின் இணைப்பிலேயே வீடு இருப்பதால் கூடுதல் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். அது போல புதிய வீடு கிரையம் செய்து, பத்திரம் பதிவு ஆகி, பட்டா மாறுதல் செய்தவர்கள் ஊராட்சிகள் வழங்கும் வரி ரசீதில் பெயர் மாற்ற முடியாமல் தவிக்கின்றனர். இதே நிலைதான் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் தங்கள் பெயருக்கு குடிநீர், வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்ற முடியாமல் உள்ளனர்.வங்கிக் கடன் போன்றவற்றிற்கு சொத்தை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான மனுக்கள் மாவட்ட அளவில் ஊராட்சிகளில் தேங்கியுள்ளன. மண்டல துணை பி.டி.ஓ., கூறுகையில், புதிய வரி முறையாக சதுர அடி கணக்கில் இந்த நிதியாண்டின் துவக்கத்தில் இணைய இணைப்பில் சிலரிடம் வசூலிக்கப்பட்டது.மக்கள் அதிருப்தியால் அது கைவிடப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பழைய வரி முறையிலேயே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இனி கிராம ஊராட்சிகளில் வரிக்கான இணைய இணைப்பு விரைவில் செயல்படும். பழைய முறையில் வரி கணக்கிடப்பட்டு ரசீது தரப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி