உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி கும்பல்; லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் மக்கள்

மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி கும்பல்; லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் மக்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாக கூறி மிரட்டல் செய்து பணம் பறிக்கும் கும்பலும் அதிகரித்து வருகிறது.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்யும் சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. வங்கி கணக்கு பிளாக் செய்யப்பட்டுள்ளது, ஏடிஎம் பிளாக் செய்யப்பட்டுள்ளது, வங்கி கணக்குடன் பான்கார்டை இணைக்க வேண்டும் உள்ளிட்ட வங்கியில் அனுப்புவது போல் அலைபேசிக்கு மெசேஜ் அனுப்பி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள லிங்க்ஐ திறந்தால் கணக்கில் உள்ள பணம் திருடப்படுகிறது.ஆன்லைன் மூலம் வெளி நாடுகளில் வேலைக்கு முயற்சிப்பது, விலையுயர்ந்த அலைபேசி உள்ளிட்ட பொருட்கள் ஆன்லைன் மூலம் வாங்க புக்கிங் செய்வது, பரிசு பொருட்கள் வந்துள்ளதாக வரும் கால், பணம் இரட்டிப்பாக தருவதாக விளம்பரங்கள் என வலைத்தளங்கள் மூலமும் பண மோசடி நடைபெற்று வருகிறது.பணம் இரட்டிப்பாக கிடைக்கும் விளம்பரங்களில் முதலில் பணம் அனுப்பி ரூ.500, ரூ.1000த்திற்கு இரட்டிப்பு தொகை உடனடியாக அனுப்பி, நம்ப வைத்து பின்னர் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்படுகிறது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக சி.பி.ஐ., பெயரில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக மோசடி செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. வங்கி கணக்கில் கூடுதல் இருப்பு வைத்துள்ள நபர்களுக்கு ஒருவர் போன் செய்து சி.பி.ஐ., யில் இருந்து பேசுவதாகவும், சில நாட்களில் சி.பி.ஐ., உயர் அதிகாரி பேசுவார் என்றும் கூறுகின்றனர். கூறியது போல் சில நாட்களில் சி.பி.ஐ., உயர் அலுவலர் பேசுவதாக லைனில் வரும் நபர் தங்களது வங்கி கணக்கை மர்ம நபர்கள் பயன்படுத்தி கருப்பு பணத்தை பரிவர்த்தனை செய்துள்ளதாக கூறுகின்றனர். கருப்பு பரிவர்த்தனை தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதால் வீட்டை விட்டு செல்லக்கூடாது. இதனால் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்ற உத்தரவு உள்ளதாகவும் கூறுகின்றனர். இதையடுத்து வங்கி கணக்கு விபரங்களை பெற்று கணக்கில் உள்ள பணம் முழுவதையும் மோசடி செய்கின்றனர். இதேபோல் கடந்த மாதத்தில் மட்டும் காரைக்குடியை சேர்ந்த நபரிடம் ரூ.46 லட்சம், சிவகங்கையை சேர்ந்த நபரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்துள்ளனர். இவ்வாறு மோசடி செய்யப்படும் பணம் வட மாநில வங்கியில் உள்ள கணக்குகளிலேயே வரவு வைக்கப்படுகிறது. வங்கி விபரம், கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபரங்களை வைத்து போலீசாரும் விசாரித்து சம்பந்தபட்டவர்களை தேடிவருகின்றனர். இருந்த போதிலும் நாளுக்கு நாள் மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர். அரசு சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு தொடந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை