வைகை ஆற்றில் வீசப்பட்ட மனுக்கள்; போலீசார் விசாரணை தொடக்கம்
திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக., 29ம் தேதி காலை மிதந்தன. வருவாய்த்துறை அதிகாரிகள் மனுக்களை சேகரித்து சென்றனர். தாசில்தார் விஜயகுமார் சிவகங்கைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மனுக்கள் அனைத்தும் நில அளவை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட மனுக்கள் என கண்டறியப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்தில் 26 பேர் பணிபுரிகின்றனர். பட்டா கேட்டு வந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நில அளவைப் பிரிவில் ஒப்படைக்கப்படும். பட்டா குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து பட்டா வழங்குவது அவர்களது பணி. தண்ணீரில் கிடந்த மனுக்களில் முகாமில் வழங்கிய மனுக்களுடன் தாலுகா அலுவலகத்தில் நேரடியாக வழங்கிய மனுக்களும் இருந்ததாக கலெக்டர் பொற்கொடி தெரிவித்திருந்தார். எனவே நில அளவைப்பிரிவில் இருந்து தான் மனுக்கள் மாயமாகி இருக்க கூடும் என கருதப்படுகிறது. நில அளவைப்பிரிவில் எட்டு பேர் பணியாற்றுகின்றனர். அவர்களிடம் இருந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வைகை ஆற்றுப்பாலத்திற்கு செல்லும் பாதையில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் மனுக்களை திருடிச்சென்று ஆற்றில் போட்டவர்கள் யார் என தெரியவர வாய்ப்புள்ளது.