நகராட்சி முன் குப்பை கொட்டி போராட்டம் அலுவலகம் மீது கல்வீச்சு: போலீசில் புகார்
சிவகங்கை:சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன் மருத்துவ கழிவு குப்பையை மீட்பு குழுவினர் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் மீட்புக்குழுவினர் என்ற பெயரில் தமிழக வாழ்வுரிமை, எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க., சேவுகரா தோழமைகள், தமிழ்நாடு சட்ட உரிமை கழகம் உள்ளிட்ட அமைப்பினர் நேற்று காலை 10:30 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன் மருத்துவக் கழிவு குப்பையை கொட்டி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் அசோக்குமார் இல்லாததால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த சிரமப்பட்டனர். தாசில்தார் மல்லிகார்ஜூனா வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகில் கொட்டி எரிக்கப்படும் குப்பையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். நகராட்சியில் இயங்கக்கூடிய குப்பையை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் 3 நிலையங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். நகராட்சியில் துாய்மை பணிகளுக்காக பெறப்படும் நிதியை துாய்மை பணிகளுக்கு மட்டுமே செலவிடுவதை உறுதி செய்ய வேண்டும். நகராட்சியில் சேகரமாகும் குப்பையை கொட்ட முறையான இடத்தை அரசு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஒரு மாதத்திற்குள் மருத்துவமனை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றிவிடுவதாகவும், குப்பை கொட்டுவதற்கான இடம் ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தாசில்தார் உத்தரவாதம் அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டம் நடந்த போது தொண்டி மேம்பாலத்தில் இருந்து நகராட்சி அலுவலகம் மீது கற்கள் வீசப்பட்டன. போராட்ட குழுவைச் சேர்ந்த குட்டிமணி கூறுகையில், மருத்துவக் கல்லுாரி அருகே கொட்டப் பட்டு உள்ள குப்பையை அகற்றக்கோரி 230க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்துள்ளோம். இதுவரை அவற்றை அகற்ற நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் மருத்துவமனை அருகே கொட்டிய குப்பையை அங்கிருந்து எடுத்துவந்து நகராட்சி அலுவலகத்தில் கொட்டி எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். மாவட்ட நிர்வாகத்தில் இருந்து பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் வந்தார். அவர் ஒரு மாதகாலத்தில் மருத்துவமனை முன் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதாகவும், குப்பைகளை கொட்ட மாற்று இடத்திற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்தில் இது நடக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவோம் என்றார். கமிஷனர் போலீசில் புகார்
நகராட்சி அலுவலகம் முன் தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த குட்டிமணி, மாவட்ட செயலாளர் பாலா மற்றும் 25க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ., இயக்கத்தை சேர்ந்த சிலர் அத்துமீறி அமர்ந்து கொண்டு குப்பையை கொட்டியும், பாட்டில்களை அலுவலகத்திற்குள் வீசியும், கற்களை அரசு வாகனங்களின் மேல் வீசியும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியுள்ளனர். அலுவலக பணியாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் அசோக்குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.