உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரி தாலுகா மருத்துவமனையில் வசதி கேள்விக்குறி ; பெயர் பலகையில் மட்டும் தரம் உயர்வு

சிங்கம்புணரி தாலுகா மருத்துவமனையில் வசதி கேள்விக்குறி ; பெயர் பலகையில் மட்டும் தரம் உயர்வு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தாலுகா மருத்துவமனை என பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்புத்துார் தாலுகாவில் இருந்து 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிங்கம்புணரியை தனி தாலுகாவாக அறிவித்தார். சிங்கம்புணரி அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்ந்து கூடுதல் வசதி கிடைக்கும் என பொதுமக்கள் காத்திருந்தனர். வருவாய் வட்ட அளவில் மட்டுமே தாலுகாவாக பிரிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனை தரம் உயர்த்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. 2023 ல் மருத்துவமனை முன்பாக தாலுகா மருத்துவமனை என பெயர்ப்பலகை மட்டும் வைக்கப்பட்டு தாலுகா மருத்துவமனைக்குரிய எந்த வசதியும், நிதி ஒதுக்கீடும் செய்து தரப்படவில்லை. கூடுதல் மருத்துவ வசதி கிடைக்காமல் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். சுற்று வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இம்மருத்துவமனையை நம்பி இருக்கின்றனர். இங்கு தினமும் 500 முதல் 800 பேர் வரை வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். விடுப்பு, பணியிட மாற்றம், டெபுடேஷன் போக ஒரு நாளில் 4 டாக்டர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். அப்போது ஒரே டாக்டர் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவலம் உள்ளது. மேலும் செவிலியர்களும் குறைவாக இருப்பதால் ஊசி போடுவதற்கும், காயத்திற்கு மருந்து கட்டவும் தாமதமாகிறது. காலை நேரங்களில் மருத்துவமனையில் பல மணி நேரம் வரிசையில் நின்று சிகிச்சை எடுக்க வேண்டிய உள்ளது. தற்போது இங்கு அறுவை சிகிச்சை, ஆர்த்தோ டாக்டர்கள் இல்லை. வாரத்தில் ஒரு நாள் வெளியூர்களில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடக்கிறது. தனியாக மகப்பேறு டாக்டர் இல்லை. ஸ்கேன் வசதி இருந்தும் அதை இயக்குவதற்கு டாக்டர் இல்லை. அ.தனசேகர், தே.மு.தி.க., தலைமை செயற்குழு உறுப்பினர்; சிங்கம்புணரி மட்டுமல்லாது எஸ்.புதுார் ஒன்றியத்துக்கும் மருத்துவமனையாக இம்மருத்துவமனை உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் இம்மருத்துவமனையையே நம்பி உள்ளனர். சிங்கம்புணரி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படாமல் இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. பெயர் பலகை மட்டும் தாலுகா மருத்துவமனையாக குறிப்பிடும் பட்சத்தில் அதற்குரிய மருத்துவ சேவைகள் டாக்டர் பணியிடங்களும் அதிகரிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட வெளியூர் அரசு மருத்துவமனைகளை நாடி செல்ல வேண்டியுள்ளது. எனவே உடனடியாக மருத்துவமனையை தரம் உயர்த்தி தாலுகா மருத்துவமனைக்கு உரிய அனைத்து வசதிகள், கூடுதல் மருத்துவர் பணியிடங்கள், நிதி ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி