உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்கவும்
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டுமென மகளிர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவங்கப்பட்டது. இந்த முகாமில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அந்தந்த பகுதியில் நடைபெறும் முகாம்களில் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர்.மின்வாரியம், நகர,ஊரக உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை சம்பந்தமான குறைகள் மற்றும் கோரிக்கைகளை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று வருகின்றனர்.இதில் பெரும்பாலான மனுக்கள் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக ஏராளமான மகளிர்கள் விண்ணப்பிக்க வருகின்ற நிலையில் முகாம்களில் அந்த பிரிவில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் மகளிர்கள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து மகளிர்கள் சிலர் கூறியதாவது, மகளிர் உரிமைத் தொகை ஆரம்பத்தில் வழங்கிய போது நாங்களும் உரிமைத் தொகைக்காக விண்ணப்பம் செய்த நிலையில் பலமுறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்கள் கொடுத்தால் 45 நாட்களுக்குள் தீர்வு ஏற்படும் என தெரிவித்து வருவதை தொடர்ந்து முகாமில் மனுக்களை வழங்க வந்தால் போதுமான ஊழியர்கள் இல்லாமல் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகவே அதிகாரிகள் முகாமில் போதுமான ஊழியர்களை நியமித்து மகளிர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை விரைவாக பெற்று உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.