உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மூங்கில் ஊருணியில் வீடு கட்டும் பணி இழுத்தடிப்பு அகதிகள் புலம்பல்

மூங்கில் ஊருணியில் வீடு கட்டும் பணி இழுத்தடிப்பு அகதிகள் புலம்பல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊருணியில் அகதிகளுக்கான குழும வீடுகள் கட்டும் பணி 2 ஆண்டாக இழுபறியில் உள்ளதால் இங்கும் அகதிகளாக தான் வாழ்கிறோம் என கவலையுடன் தெரிவித்தனர். இலங்கையில் 1984ம் ஆண்டில் போர் ஏற்பட்டது. அங்கிருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். அந்தந்த மாவட்டங்களில் அகதிகள் முகாமை அரசு அமைத்து கொடுத்தது.1990ல் மானாமதுரை அருகே மூங்கில் ஊருணியில் 350 குடும்பத்தினர் குடியேறினர். தற்போது 196 குடும்பத்தினர் இந்த முகாமில் வசித்து வருகின்றனர். தங்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்து வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். முதல்வர் ஸ்டாலின், அகதிகளுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்தார். மூங்கில்ஊருணி முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 196 வீடுகள் கட்ட ரூ.11.50 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது.மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலரின் கண்காணிப்பில், ஒப்பந்ததாரர்கள் 2023 செப்.,ல் ஒரு குழுவிற்கு 4 வீடுகள் வீதம் 49 குழுவிற்கு 196 வீடுகள் கட்டும் பணியை துவக்கினர். இக்குழும வீடுகள் கட்ட தொடங்கி 2 ஆண்டு தொட உள்ள நிலையில், இது வரை வீடுகளை கட்டி முடித்து அகதிகளிடம் ஒப்படைக்கவில்லை. 2 ஆண்டாக மானாமதுரை நகருக்குள் வாடகை வீட்டில் அகதிகள் வசித்து வருகின்றனர். வீடுகளை விரைந்து கட்டி முடித்து அகதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பெண்கள்சிவகங்கை கலெக்டர் (பொறுப்பு) செல்வசுரபியிடம் மனு அளித்தனர்.

வாடகை வீடுகளில்தவிப்பு

மூங்கில் ஊருணி அகதிகள் முகாம் சூர்யபிரபா கூறியதாவது: புதிய வீடுகள் கட்டுவதற்காக, இடங்களை காலி செய்து, மானாமதுரை நகருக்குள் வாடகை வீடுகளில் குடியேறினோம்.ஆரம்பத்தில் ரூ.2500 வீதம் வாடகை வசூலித்தனர். தற்போது ரூ.5000 வரை வாடகை கேட்கின்றனர். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் தவிக்கிறோம். முதல்வர் அறிவித்த வீடு கட்டும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், முகாமில் குடிநீர், தார் ரோடு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதியை செய்து தந்து, வீடுகளை ஒப்படைக்க வேண்டும், என்றார்.

அடிப்படை வசதிக்குகூடுதல் நிதி

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்க அலுவலர் கூறியதாவது:வீடுகள் கட்டும் பணிக்காக ஒப்பந்ததாரருக்கு பணி முடிக்கும் தன்மையை பொறுத்து அரசு நேரடியாக நிதி ஒதுக்கி வருகிறது. குடிநீர், தார்ரோடு, கால்வாய் வசதி நிதி ஒதுக்கி செய்து தரப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை