கட்டிக்குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற தயக்கம் கழிவுநீர் கால்வாய் நிதி திரும்பிய அவலம்
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளால் ரூ.40 லட்சம் நிதி வீணாக திரும்பி சென்று விட்டதாக பெண் ஊராட்சி தலைவர் வேதனையுடன் தெரிவித்தார்.மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கட்டிக்குளம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இங்குள்ள தெருக்களில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக மக்கள் செல்ல முடியவில்லை.கடந்த 2 வருடங்களாக கட்டிக்குளத்தில் கழிவுநீர் வாய்க்கால் கட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், தாசில்தாரிடமும், மாவட்ட கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித பணிகளையும் துவங்காத காரணத்தினால் கட்டிக்குளத்தில் ரோடுகளிலும், தெருக்களிலும் எப்போதும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கட்டிக்குளம் ஊராட்சி தலைவர் சாந்தி தமிழ் நேசன் கூறியதாவது: கட்டிக்குளத்தில் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கழிவு நீர் வாய்க்கால் கட்டுவதற்காக, ரோடுகள் மற்றும் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சர்வே செய்து கொடுக்குமாறு தாலுகா அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் கடந்த சில வருடங்களாக மனு கொடுத்து வருகிறேன்.அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால் வாய்க்கால் கட்டுவதற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை எவ்வித பணிகளையும் துவக்காத காரணத்தினால் வந்த நிதி திரும்பி சென்று விட்டது. இதுவரை 5 தாசில்தார்கள்,4க்கும் மேற்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் மனு கொடுத்தும் சிறிய பணி கூட நடக்கவில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் மக்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.