இரு முறை நோட்டீஸ் கொடுத்தும் அகற்றப்படாத ஆக்கிரமிப்பு அகற்றம்
திருப்புவனம் : திருப்புவனம் அருகே மேலராங்கியத்தில் இரு முறை நோட்டீஸ் வழங்கியும் கண்டு கொள்ளாததால் நேற்று கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.மேலராங்கியத்தில் ரோட்டை ஆக்கிரமித்து சிலர் கட்டடங்கள் கட்டியும், மரங்கள் வளர்த்தும் வருகின்றனர். இதனால் கனரக வாகனங்கள் ஊருக்குள் வர முடியவில்லை. அவசரத்திற்கு தீயணைப்பு வாகனம் கூட வரமுடியவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் சிலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து ஆக்கிரமிப்பு அளவிடப்பட்டு கடந்தாண்டு நவம்பர் 16 மற்றும் மார்ச் 6 ஆகிய இரு தினங்களில் ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்ற நோட்டீஸ் வழங்கியது.ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவே இல்லை. இந்நிலையில் நேற்று திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார், பழையனூர் போலீசார் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி இடிபாடுகளை டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தினர்.