புளியால் பிரிவுச்சாலை அகலப்படுத்த கோரிக்கை
தேவகோட்டை: திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை தேவகோட்டை, புளியால் உட்பட முக்கிய ஊர்களின் வழியாக செல்கிறது. போக்குவரத்து வசதிக்காக தேவகோட்டை, புளியால், கிளியூர் ஊர்களில் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் இருக்க புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதில் புளியால், கிளியூர் கிராமங்களுக்கு செல்லும் ரோட்டின் சந்திப்பு விலக்கில் அகலம் குறைவாக உள்ளது.குறுகிய சந்திப்பில் சென்டர் மீடியனும் முக்கால் அடி உயரத்தில் தடுப்பு சுவரும் கட்டப்பட்டுள்ளது. குறுகிய ரோடு என்பதாலும், வெளிச்சம் இல்லாததாலும் தடுப்பு சுவர் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.சமூக ஆர்வலர் ஆனந்த் கூறுகையில், பல முறை அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டோம். அதிகாரிகளும் பார்த்து சென்றுள்ளனர். இதே ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர். எஸ். மங்கலம் அருகே மங்கலம் இடத்தில் தொடர் விபத்து காரணமாக தடுப்பு சுவரை அகற்றி விட்டனர். இதே போல புளியால் விலக்கிலும் ரோட்டை அகலப்படுத்த வேண்டும் இல்லையேல் தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என்றார்.