வீதியில் தேங்கும் கழிவுநீர், குப்பை விழிபிதுங்கும் குடியிருப்புவாசிகள்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வீடுகள் முன் கழிவுநீர், குப்பை தேங்குவதால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.இப்பேரூராட்சியை ஒட்டிய அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்துவடுகசுவாமி நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகரை ஒட்டி இருந்தாலும் ஊராட்சிப் பகுதி என்பதால் போதிய கழிவு நீர் கால்வாய் வசதி இல்லை. குறிப்பாக தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சில அடி துாரத்திற்கு மட்டும் கால்வாய் அமைக்கப்பட்டது. இருபுறமும் பாதியில் விடப்பட்டதால் கால்வாயில் வரும் கழிவுநீர், குப்பை பக்கத்து தெருவுக்குள் வீடுகள் முன்பாக ஓடி தேங்கிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் மக்களுக்கு அடிக்கடி தொற்று நோய் ஏற்படுகிறது. இப்பகுதியை சிங்கம்புணரி பேரூராட்சியுடன் இணைக்க தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்ட நிலையில், கால்வாய் பணிகளை யார் மேற்கொள்வது என்பதில் பேரூராட்சி, ஊராட்சிக்கிடையே குழப்பம் நிலவுகிறது.