ஓய்வு பல்கலை அதிகாரி தற்கொலை முயற்சி
சிவகங்கை:காரைக்குடி அருகே வைரவபுரத்தைச் சேர்ந்தவர் ஆர்.பத்மாவதி. அழகப்பா பல்கலையில் உதவி பதிவாளராக பணிபுரிந்தார்; 2023 மார்ச் 31ல் ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்று ஒன்றரை ஆண்டு முடிந்தும், அவருக்கு ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கவில்லை. இதுகுறித்து, பல்கலை நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் தீர்வு எட்டப்படவில்லை.இதனால், பத்மாவதி நேற்று காலை 11:30 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.பாதுகாப்பு பணியில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் செல்வராஜ், அவரை மீட்டு கலெக்டரின் பி.ஏ., முத்துகழுவனிடம் அனுப்பினார். பின், அப்பெண்ணிற்கு முதலுதவி அளித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ஜி.ரவி கூறியதாவது:அவருக்கு ஓய்வூதிய பலனை கொடுக்கத் தான் விரும்புகிறோம். நேரடியாக அழைத்து பேச முயற்சித்தும் அவர்கள் வரவில்லை. பதிவு தபால் அனுப்பியும் அதை வாங்கவில்லை. இவருக்கான பணப்பலனை தணிக்கை துறை தான் நிறுத்தி வைத்துள்ளது. பல்கலை நிர்வாகத்திடம் ஒன்றும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.