மேலும் செய்திகள்
திருப்புவனம் நீதிமன்றத்திலும் விசாரணை தொடக்கம்
06-Jul-2025
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகளுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப் பட்டுள்ளது. மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்த 9.5 பவுன் நகை திருடு போன சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் ஜூன் 28ம் தேதி கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் 29, பலியானார். இச்சம்பவத்தை அலைபேசியில் படம் பிடித்த கோயில் ஊழியர் சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அஜித்குமார் கொலை சம்பவம் கோயில் அருகே உள்ள கோசாலையில் நடந்ததால் சம்பவம் நடந்த ஜூன் 28ம் தேதி முதல் கோயில் உதவி கமிஷனர் அலுவலகம், அஜித்குமார் வீடு, சக்தீஸ்வரன் வீடு உள்ளிட்ட பகுதியில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று முன்தினம் திடீரென அனைத்து இடங்களில் இருந்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து சக்தீஸ்வரன் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். இதனை தொடர்ந்து மீண்டும் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. ஒவ்வொருவர் வீட்டிலும் தலா 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், அதை ஒருவராக குறைத்து விட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவுபடி சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. சக்தீஸ்வரன் வீடு, கோயில் உதவி கமிஷனர் அலுவலகம், அஜித்குமார் வீட்டில், பிரச்னை நிலவியதால் பாதுகாப்பு போடப்பட்டது. அது எப்போது வேண்டுமானாலும் விலக்கி கொள்ளப்படும். இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளோம், என்றனர்.
06-Jul-2025