சொத்துவரி உயர்வை கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு
காரைக்குடி; காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நேற்று முழு கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 1லட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சியில் சொத்து வரி உட்பட பல்வேறு இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.50.75 கோடி வரி வருவாய் உள்ளது. இந்த மார்ச் மாதத்திற்குள் வரி வசூல் 100 சதவீதத்தை எட்டும் நோக்கில் அதிகாரிகள் வரி வசூலில் தீவிரம் காட்டி வருகின்றனர். வரி உயர்வுக்கு எதிர்ப்பு
காரைக்குடி நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் காலியிடங்களுக்கு பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.மேலும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள், வரி வசூல் செய்யும் போது மக்களிடம் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் மக்கள் கூறுகின்றனர். கடை அடைப்பு போராட்டம்
வரிபாக்கி செலுத்தாத கடை முன்பு குப்பைத்தொட்டி வைத்ததால் வணிகர்களும் மக்களும் ஆத்திரம் அடைந்தனர். வரி உயர்வை குறைப்பதற்கு மாநகராட்சியில் அவசரக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தொழில் வணிக கழகத்தினர் வலியுறுத்தினர்.ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனைக் கண்டித்து நேற்று காரைக்குடியில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இதில், 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. காரைக்குடி நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி அலுவலகம் முன் தொழில் வணிகக் கழகத்தினர், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சென்றனர். முற்றுகை போராட்டம்
அ.தி.மு.க., பா.ஜ.,நாம் தமிழர் கட்சி, த.வெ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதன் பின் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர். முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட சிலரை போலீசார் விரட்டியடித்தனர்.