| ADDED : மே 29, 2024 05:50 AM
பொதுமக்கள் கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர் பை, பித்தப்பை போன்ற உள்ளுறுப்பு பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை பெற அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கின்றனர்.இதுதவிர வயிற்று வலி, இதர வயிறு பிரச்னையால் பாதிக்கப்படுவோர், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுக்கின்றனர். பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லுாரியில் ஸ்கேன்எடுக்கும் ரேடியாலஜி பிரிவில் கடந்த காலங்களில் பேராசிரியர் உட்பட 7 பேர் இருந்தனர்.தற்போது பெரும்பாலான கல்லுாரிகளில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இணைப் பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மூன்று உதவி பேராசிரியர்கள் மட்டுமே ஸ்கேன் எடுக்கின்றனர். அவர்கள் பணிப்பளுவைக் காரணம் காட்டி குறைந்த நபர்களுக்கே ஸ்கேன் எடுக்கின்றனர்.நோயாளிகள் கூறுகையில், சாதாரண வயிற்று வலி பிரச்னைக்கே உள்நோயாளியாக தங்கினால் தான் ஸ்கேன் எடுக்க முடியும் என்கின்றனர். இல்லாவிட்டால் வெளியே எடுக்க கூறுகின்றனர்.வசதி இல்லாதவர்கள் சாதாரண வயிற்று வலியாக இருந்தாலும் ஒரு வாரம் காத்திருந்து தான் ஸ்கேன் எடுக்கின்றனர். வசதி படைத்தவர்கள் பணம் செலவழித்து வெளியே எடுத்து கொள்கின்றனர். தனியார் மையத்தில் ஸ்கேன் எடுக்க ரூ.800 முதல் ரூ.1200 வரை செலவாகிறது என்றனர்.டாக்டர்கள் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக துவங்கிய பெரும்பாலான மருத்துவக் கல்லுாரியில் ரேடியாலஜி பிரிவில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.உதவி பேராசிரியர்களை வைத்து தான் சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. சிவகங்கை போன்ற மருத்துவக் கல்லுாரியில் அவர்களும் தினசரி 60 நபர்களுக்கு ஸ்கேன் எடுக்கின்றனர். அரசு தான் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.