இருள்சூழ்ந்த நகராட்சி தெருக்கள் தவிக்கும் சிவகங்கை மக்கள்
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியிலுள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.சிவகங்கை நகராட்சியில் மஜித்ரோடு, காந்திவீதி, திருப்புத்துார் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் தெரு விளக்குகள் எரிவதில்லை. எரியும் சில விளக்குகளும் போதிய வெளிச்சமின்றி அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது.குறிப்பாக மானாமதுரை கல்லுாரி ரோட்டில்சர்ச்சில் இருந்து கல்லுாரிவரை உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. ஆயுதப்படை குடியிருப்பு 48 காலனியில் இருந்து அண்ணாநகர் வழியாக பனங்காடி ரோடு அதிகம் மக்கள் நடமாட்டம் உள்ள ரோடாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகளும் எரிவதில்லை. நகரிலுள்ள பெரும்பாலான தெருக்கள் வணிக நிறுவனங்களில் எரியும் விளக்குகளால் மட்டுமே ஓரளவு ரோட்டில் வெளிச்சம் தெரிகிறது. வணிக நிறுவனங்கள் இரவு 9:00 மணிக்கு மேல் மூடி விட்டால் தெருக்கள் முழுவதும் இருள் சூழ்ந்து விடும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தும் பயனில்லையே என மக்கள் குமுறுகின்றனர். நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மக்கள் பிரச்னை குறித்து கவலை இன்றி பணி செய்கின்றனர். சிவகங்கை நகராட்சி மொத்தத்தில் செயலிழந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நகரில் எரியாத மின் விளக்குகளை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.