| ADDED : செப் 23, 2011 01:04 AM
சிவகங்கை : சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் அரசு பஸ் மோதியதால் இறந்த பள்ளி மாணவி குடும்பத்திற்கு 2.25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சிவகங்கை கோர்ட் தீர்ப்பளித்தது. சிவகங்கை அருகே கொல்லங்குடியை சேர்ந்த நாகராஜன் மகள் கீர்த்தனா, 14. நாட்டரசன்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். கடந்த 2004ம் ஆண்டு டிச.,7ம் தேதி மாலை 5.30 மணிக்கு பள்ளி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். நாட்டரசன்கோட்டை - கண்டுப்பட்டி ரோட்டில் வடவூர்கண்மாய் அருகே சென்றபோது, பின்னால் நாட்டரசன்கோட்டை - கல்லல் நோக்கி வந்த அரசு பஸ் மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த மாணவி, சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். சிவகங்கை தாலுகா போலீசார் விசாரித்தனர். விபத்தில் இறந்த மாணவியின் தந்தை இழப்பீடு கோரி சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சோலைமலை,மாணவியின் குடும்பத்திற்கு 2.25 லட்ச ரூபாயை, காரைக்குடி அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், இழப்பீடாக வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தார்.