சிவகங்கை : சிவகங்கை பள்ளிகளில் நேற்று நடந்த காலாண்டு தேர்வில் பிளஸ் 1 மாணவர்களுக்கான சிறப்பு தமிழ் தேர்வு வினாக்களில் குழப்பம் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 12,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 1 படிக்கின்றனர். இம்மாவட்டத்தில் காலாண்டு தேர்வு துவங்கியது. நேற்று நடந்த பிளஸ் 1 மாணவர்களுக்கான சிறப்பு தமிழ் தேர்வு, நேற்று பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30 மணி வரை நடந்தது. இதில், 40 ஒரு மதிப்பெண் வினா, 10 இரண்டு மதிப்பெண், இரண்டு 5 மதிப்பெண், 6 பத்து மதிப்பெண் உட்பட 180 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்க வேண்டும். குழப்பம்: ஆனால், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளின் நான்கு பக்கங்களில், 2 பக்கங்களில் 40 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதிலாக 30 வினாக்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. எத்தனை மதிப்பெண்களுக்கான வினாக்களுக்கு விடை அளிக்கவேண்டும் என, தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
ஆசிரியர்களும், மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாட்களில் உள்ள குளறுபடிகளை கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், அனைத்து மாணவர்களும் 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே விடை அளித்தனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வினாத்தாள் தயாரிப்பின் போது, பிரிண்டிங்கில் சில பக்கங்களை விட்டுவிட்டனர். இதனால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.