| ADDED : நவ 15, 2025 05:19 AM
சிவகங்கை: சிவகங்கை நகரில் டூவீலரில் பறக்கும் மாணவர்களையும் விதிமுறைகளை மீறி விபரீதமாக பஸ்சில் பயணம் செய்பவர்களை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க் கின்றனர். சிவகங்கையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து படிக்கின்றனர். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வர சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு டூவீலரை கொடுத்து அனுப்புகின்றனர். டூவீலர் ஓட்டுவதற்கு முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பலரும் உரிமை வைத்திருப்பதில்லை. சில மாணவர்கள் நகர் வீதிகளில் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிவிரைவாக செல்கின்றனர். உரிமம் வைத்திருப்பது ஒருவராகவராகவும், வாகனத்தை ஓட்டுவது வேறு மாணவராகவும் இருக்கின்றனர். முறையான பயிற்சியில்லாமல் ஆர்வத்தினால் மட்டும் டூவீலரை ஓட்டுவதால் பல பகுதிகளில் எதிரே வருவோர் விபத்துக்குள்ளாகின்றனர். தொலைதுாரத்தில் இருந்து நகர் பள்ளி கல்லுாரிகளுக்கு வருவதற்கு பல பகுதிகளில் பஸ் வசதி குறைவாக இருப்பது, டியூசன் செல்வது போன்ற காரணங்களை வைத்து மாணவர்கள் டூவீலரில் செல்கின்றனர். இவ்வாறு வரும் மாணவர்கள் கல்லுாரி சாலையில் காலை மாலை நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். சிலர் காந்திவீதி, நேருபஜார், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அதிகவேகமாகவும் அதிகசத்தம் எழுப்பிக்கொண்டு செல்வது எதிரே வருவோருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. டூவீலரில் தலைக்கவசம் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் எந்த பாதுகாப்பும் இல்லாமல் மாணவர்கள் அதிவேகமாக ஓட்டுவதால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு கூட தொண்டி ரோட்டில் டூவீலர் விபத்தில் கல்லுாரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் கிராம புறங்களில் இருந்து வரக்கூடிய பஸ்களில் காலை மாலை நேரத்தில் பள்ளி கல்லுாரி மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் பயணம் செய்யும் சூழல் உள்ளது. நகரில் காலை மாலை நேரத்தில் டூவீலரில் அதிவேகமாக செல்லும் மாணவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.