மூன்று தலைமுறையாக தீராத மடை பிரச்னை: மழை பெய்தும் விவசாயம் செய்வதில் சிக்கல்
சாக்கோட்டை ஒன்றியத்தில் 4 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயமே பிரதான தொழிலாக விளங்கும் இப்பகுதியில் பெரும்பாலும் மானாவாரி விவசாயமே நடைபெறுகிறது. காரைக்குடியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 171 கண்மாய்களும், சாக்கோட்டை யூனியனில் 308 கண்மாய்களும், 375 ஊருணிகளும் உள்ளன. சாக்கோட்டை ஒன்றியம் களத்துார் ஊராட்சியில் ராயர் செட்டிவயல் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை நம்பி 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. யூனியனுக்கு சொந்தமான இக்கண்மாயில் 3 மடைகள் உள்ளன. இந்த 3 மடைகளும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து கிடக்கிறது. மழைகாலங்களில் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாமல், விவசாய பணி கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிவிக்கின்றனர். விவசாயி செல்வகுமார் கூறுகையில்: 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாயில் 3 மடைகள் உள்ளன. எனது அப்பா, நான் எனது மகனும் விவசாய பணி செய்தோம். கண்மாயின் 3 மடைகளும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து கிடக்கிறது. கண்மாயும் துார்வாரப்படவில்லை. போதிய மழை பெய்தாலும் தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. கண்மாயின் தண்ணீர் மொத்தமும் வெளியேறி விடும். முடிந்த அளவு மணலை போட்டு மடையை அடைத்து, இருக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்வோம். அதிலும் மறு மழை பெய்யவில்லை என்றால் விவசாயம் முற்றிலும் பாதிக்கும். இதுகுறித்து, மக்கள் தொடர்பு முகாம் உங்களுடன் ஸ்டாலின் உட்பட பல்வேறு இடங்களில் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள இப்பகுதி மக்கள் ஆண்டு தோறும் இழப்பை சந்திக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.