துவங்கியது மழை: கால்வாயை துார்வாரும் விவசாயிகள்
திருப்புவனம்; மழை காலம் தொடங்கியதை அடுத்து விவசாயிகளே கண்மாய் வரத்து கால்வாய்களை துார் வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்புவனம் கண்மாயை நம்பி ஆயிரத்து 800 ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, தென்னை பயிரிடப்படுகிறது. திருப்புவனம் கண்மாயில் நான்கு மடைகள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 4வது மடை மூலமாக மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு மத்தியில் மூன்று கி.மீ., துாரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய் முழுவதும் நாணல், கருவேல மரங்கள் அடர்ந்திருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும் முழுமையாக சென்று சேர்வதில்லை. பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக விவசாய நிலங்கள் வழியாக வெளியேறி வருகிறது. கால்வாயை துார் வார குறைந்த பட்சம் ஐந்து லட்ச ரூபாய் வரை செலவாகும் என்பதால் விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் போதிய நிதி இல்லை என்றும், நிதி வந்த உடன் துார் வாரப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள தெரிவித்துள்ளனர். தற்போது பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகள் சம்பா பருவ சாகுபடிக்காக நாற்றங்கால் அமைத்துள்ளனர். நடவு செய்ய கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும், கால்வாய் முழுவதும் நாணல்கள் இருப்பதால் வேறு வழியின்றி விவசாயிகளே இணைந்து கடந்த ஒரு வாரமாக துார் வாரி வருகின்றனர். விவசாயி ஆறுமுகம் கூறுகையில்: கடும் வறட்சி, பன்றி தொல்லை ஆகியவற்றை மீறி விவசாயம் செய்கிறோம்.மேட்டு வாய்க்கால் மூலம் 400 ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, தென்னை பயிரிட்டுள்ளோம். ஒவ்வொரு வருடமும் கால்வாய் துார் வாரினால் தான் விவசாயம் செய்ய முடியும், பல இடங்களில் கரைகள் சேதமடைந்துள்ளதால், மணல் மூடைகளை அடுக்கி சரி செய்து வருகிறோம். இதுவரை 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்து துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாயை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.