| ADDED : ஜன 27, 2024 04:43 AM
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டத்தில் இந்தாண்டு எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாததால் தற்காலிக நெல் கொள்முதல் மையம் மூலம் எதிர்பார்த்த அளவு நெல் கொள் முதல் செய்ய வாய்ப்பில்லை என அதிகாரிகள் கருதுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதியில் தற்காலிக நெல் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த பகுதி நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். 2022ல் 63 தற்காலிக நெல் கொள்முதல் மையங்கள் மூலம் 60 மெட்ரிக் டன் நெல்லும், 2023ல் 54 மெட்ரிக் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டது. தற்காலிக நெல் கொள்முதல் மையம் மூலம் கொள் முதல் செய்யப்படும் நெல் மூடைகள் மானாமதுரையில் உள்ள அரசு நவீன அரவை மையத்தில் அரைக்கப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். கடந்த இரு ஆண்டுகளாக விளைச்சல் அதிகரித்த நிலையில் அதிகளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு மிகவும் தாமதமாக விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்கியதால் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லை. ஒரு சில பகுதிகளில் நெல் விவசாயம் நடைபெறவே இல்லை.விவசாயிகள் கூறுகையில்:நெல் விவசாயம் குறைந்ததற்கு முதல் காரணம் பன்றிகள் தான், கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் பன்றிகளிடம் இருந்து நெற்பயிரை காப்பாற்ற முடியாமலும் கடனை திரும்ப செலுத்த முடியாமலும் அவதிப்படுகின்றனர். எனவே இந்தாண்டு பெரும்பாலான விவசாயிகள் பயிரிடவே இல்லை. திருப்புவனம் வட்டாரத்தில் சுமார் நான்காயிரம் எக்டேரில் நெல் நடவு செய்யப்படும், வைகை அணையில் போதிய தண்ணீர் இருந்த போதிலும் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் கலெக்டருக்கு பரிந்துரை செய்யவே இல்லை. பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் கிணற்று தண்ணீரை வைத்து நெல் நடவு பணிகளை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் பிரிவு செயல்பட்டாலும் விவசாயிகளுக்கு தேவையான டிராக்டர், உழவு கருவி, அறுவடை இயந்திரம் உள்ளிட்ட எதுவும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் கூடுதல் வாடகை கொடுத்து பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் நடவு பணிகளில் ஈடுபடவே இல்லை. விளைச்சல் இல்லாததால், இந்தாண்டு அரிசி விலை கடுமையாக உயரும் வாய்ப்புள்ளது, என்றனர்.