| ADDED : பிப் 23, 2024 05:17 AM
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் வைக்கோல் கட்டு விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இந்தாண்டு மூவாயிரம் எக்டேரில் கோ 51, என்.எல்.ஆர்., ஆர்.என்., ஆர்., உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன.கடந்த ஜனவரி முதல் அறுவடை நடந்து வருகிறது. ஓரு ஏக்கரில் அறுவடை முடிந்த பின் 35 முதல் 50 கட்டு வைக்கோல் வரை கிடைக்கும், நெல் ரகங்களை பொறுத்து இது கூடும். கடந்த மாதம் வரை ஒரு கட்டு 60 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 100 ரூபாய் என உயர்ந்துள்ளது. பெங்களூரு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வைக்கோல் கொள்முதல் செய்ய வந்ததால் விலை உயர்ந்துள்ளது.கேரளா பகுதிகளில் நெல் விவசாயம் இல்லாததால் கால்நடைகளுக்கு தமிழகத்தில் இருந்து தான் வைக்கோல் கொண்டு செல்கின்றனர். ஒரு லாரியில் 165 கட்டுகள் வரை ஏற்றலாம் என்பதால் வியாபாரிகள் வைக்கோல் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வைக்கோல் வாங்கி கேரளா வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.வியாபாரிகள் கூறுகையில்: பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் ஏற்றி வரும் லாரிகள் திரும்ப செல்லும் போது வைக்கோல் கட்டுகளை ஏற்றி செல்கின்றனர். தமிழகத்தில் 100 ரூபாய்க்கு வாங்கப்படும் வைக்கோல் கட்டு பெங்களூரில் 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் காலங்களில் இன்னமும் வைக்கோல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,என்றனர்.