சிவகங்கையில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஒரு வாரமாக வரவில்லை
சிவகங்கை: சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட மஜித்ரோடு, மீனாட்சி நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு நாள் ஒன்றுக்கு நகராட்சி சார்பில் 90 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். மருதுபாண்டியர் நகர், மதுரை ரோடு, காளவாசல், அம்பேத்கர் தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மேல் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இடைக்காட்டூர் வைகை ஆற்று குடிநீர், திருச்சி காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சிவகங்கை மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.இந்நிலையில் மஜீத்ரோடு 14,15 வது வார்டு, மீனாட்சி நகர் 7,8,9 வது வார்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் வரவில்லை. இந்த பகுதி மக்கள் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிப்பதற்கான தண்ணீர் கேன் ரூ.40 கொடுத்து வாங்குவதாகவும், இது குறித்து நகராட்சியில் பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.நகராட்சி பிட்டர் முத்துராஜா கூறுகையில், மதுரை ரோடு குடிநீர் மேல்தேக்க தொட்டியில் நகராட்சி சார்பில் கட்டுமான பணி நடந்து வருகிறது. நகரின் பிற பகுதிக்கு செல்லும் குழாய்கள் சேதமடைந்துள்ளது. அவற்றை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் பணி முடிந்து விடும். இடைக்காட்டூர் தண்ணீர் தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறோம். அனைத்து பகுதிக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.