திருப்புவனம் அரசு மருத்துவமனையில் ரூ. 63 லட்சத்தில் பிரேத பரிசோதனை கூடம்
திருப்புவனம், : திருப்புவனம் அரசு மருத்துவமனையில் 63 லட்ச ரூபாய் செலவில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பிரேத பரிசோதனை கூடம் கட்டப்பட உள்ளது. திருப்புவனம் அரசு மருத்துவமனையில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரேத பரிசோதனை கூடம் பயன்பாட்டில் உள்ளது. பரிசோதனை கட்டடத்தில் இடப்பற்றாக்குறை, குளிர்சாதன வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான உடல்கள் உடற்கூராய்விற்கு மதுரை, சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்படும், அடையாளம் காண முடியாத உடல்கள் பாதுகாப்பாக வைத்திருக்க பிரீசர் வசதி இல்லை. முன்னாள் நிதியமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நவீன பிரேத பரிசோதனை கூடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இடத்தை ப.சிதம்பரம் பார்வையிட்டார். அவரை அரசு மருத்துவர் கார்த்திகேயன் வரவேற்றார். இடத்தை பார்வையிட்ட பின் வரும் பிப்ரவரிக்குள் கட்டட பணிகளை முடிக்க வேண்டும், தரமாக கட்டப்பட வேண்டும், மாதம்தோறும் ஆய்வு செய்ய வருவேன் என்றும் சிதம்பரம் ஒப்பந்தகாரரிடம் தெரிவித்தார். மூன்று நவீன பிரீசர் பாக்ஸ் உள்ளிட்ட வசதியுடன் கட்டடம் அமைய உள்ளது.