கீழடியில் பண்டைய பொருட்கள் வாங்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
கீழடி : கீழடி அருங்காட்சியகத்தில் பூம்புகார் விற்பனையகம் மூலம் பண்டைய கால பொருட்கள் மாடலில் விற்பனை செய்யப்படும் பொம்மைகளை வாங்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தில் ஆறு கட்டட தொகுதிகளில் 13 ஆயிரத்து 384 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை காண தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தலையலங்கார பொம்மை, குடுவைகள், திமிலுள்ள காளை, உறை கிணறு, ஒரு இஞ்ச் சிறிய பானை, சுடுமண் பொருட்கள் போன்றவற்றை தமிழ்நாடு கைத்திற தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் பூம்புகார் விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தத்ரூபமாக அதுபோன்ற மண் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ரூ.112 முதல் ரூ.3,000 வரையிலான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சாவி கொத்து, குடுவை, டீ கப் உள்ளிட்ட பொருட்களை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.