புதர் மண்டிய பகுதி பூந்தோட்டமாக மாற்றம்
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை அறிவியல் வளாகத்தில், புதர் மண்டிய பகுதி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முயற்சி யால் பூங்காவாக காட்சி யளிக்கிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கு உட்பட்ட அறிவியல் வளாகம் அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி அருகே செயல்பட்டு வருகிறது. பல்வேறு அறிவியல் துறைகள் ஆய்வகங்கள் குளிரூட்டப்பட்ட அறைகள் என பல்வேறு வசதிகளுடன் கூடிய இவ்வளாகத்தின் நுழைவு வாயில் பிரம்மாண்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் ஒருபகுதியில் புற்களும் புதர்ச் செடிகளும் நிறைந்து கிடந்தது. இந்நிலையில், பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் முயற்சியால் புதர் செடிகள் அகற்றப்பட்டு பூந்தோட்டமாக காட்சியளிக்கிறது. மஞ்சள் மற்றும் சிவப்பு நிற செவ்வந்தி செடிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பூக்கள், பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளதால் பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டதோடு அலைபேசியில் புகைப்படமும் எடுத்து வருகின்றனர். பேராசிரியர்கள் கூறுகையில், புதர் செடிகள் அகற்றப்பட்டு செவ்வந்தி வைக்கப்பட்டது. முறையாக பராமரிக்கப்பட்டதன் விளைவாக தற்போது, பூக்கள் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன. இதேபோன்று, புதிதாக தோட்டங்கள் அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் கிடைக்கும் காய்கறிகள், விடுதிகளில் உணவு சமைக்க பயனுள்ளதாக அமையும்.