உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பஸ்களுக்கு அறிவிக்கப்படாத விடுமுறை மானாமதுரை பயணிகள் தவிப்பு

அரசு பஸ்களுக்கு அறிவிக்கப்படாத விடுமுறை மானாமதுரை பயணிகள் தவிப்பு

மானாமதுரை: மானாமதுரை பகுதியிலிருந்து சிவகங்கை மார்க்கமாக இயக்கப்படும் அரசு பஸ்கள் விடுமுறை நாட்களில் இயக்கப்படாமல் உள்ளதினால் பயணிகள், மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரையில் இருந்து தினந்தோறும் சிவகங்கைக்கு 1000க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும், கூலி தொழிலாளர்களும் சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக அரசு டவுன், புறநகர் பஸ்கள் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அண்ணாதுரை, காந்தி சிலை, சிப்காட் வழியாக சிவகங்கைக்கு சென்று வருகின்றன. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வேலை நாட்களில் ஏராளமான பஸ்கள் சிவகங்கைக்கு சென்று வருகிற நிலையில் விடுமுறை நாட்களில் பாதி பஸ்கள் வராமல் இருப்பதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து மானாமதுரை பயணிகள் கூறியதாவது, மானாமதுரையில் இருந்து தினந்தோறும் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் செல்வதற்கு போதுமான பஸ்கள் இயக்கப்படாத நிலையில் வருகின்ற பஸ்களில் கூட்ட நெரிசலில் பயணித்து வருகிறோம். கூடுதலாக பஸ் விட வேண்டுமென்று நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரை போதிய பஸ்கள் விடாமல் உள்ளனர். பள்ளி,கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் விடுமுறை நாட்களில் ஏற்கனவே விடுகின்ற பஸ்களில் பாதி பஸ்களை வேறு மார்க்கங்களில் மாற்றி விடுவதினால் பள்ளி,கல்லூரிகளில் சிறப்பு வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள்,கூலி தொழிலாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ