உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உஷார்: ஆன்லைனில் பகுதி நேர வேலை என ஏமாற்றும் கும்பல்: டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக பணம் பறிமுதல்

உஷார்: ஆன்லைனில் பகுதி நேர வேலை என ஏமாற்றும் கும்பல்: டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக பணம் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் தினமும் பலர் பல லட்சங்களை இழந்து வருகின்றனர்.சைபர் கிரைம் போலீசுக்கு வரும் புகார் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பொதுமக்களே விழிப்புடன் இருக்க தொடர்ந்து போலீசார் உஷார் படுத்தி வருகின்றனர்.ஆன்லைனில் வேலைவாய்ப்பு, பெட் எக்ஸ் மோசடி, ஆன்லைன் டிரேடிங் மோசடி, எஸ்.பி.ஐ., ரிவார்ட் மோசடி என பல்வேறு வழிகளில் மோசடி நடக்கின்றன. இது குறித்து பல்வேறு வழிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும், ஏமாந்து பணத்தை இழப்போரின் எண்ணிக்கை குறையவில்லை. மோசடி கும்பல் குறிப்பாக வணிகர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்,பெண்கள், வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து ஆன்லைனில் மோசடியில் ஈடுபடுகின்றனர். ஜன.26ல் திருப்புத்துாரில் ஓய்வு பெற்ற ஓ.என்.ஜி.சி., பணியாளரிடம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என கூறி 82.55 லட்சம் மோசடி. ஜன.13ல் தேவகோட்டை ராம் நகரைச் சேர்ந்த 88 வயது முதியவரிடம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.87 லட்சம் மோசடி. மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் 38 வயது இளைஞரிடம் ஜன.13 அன்று ரூ.27.40 லட்சம் மோசடி.ஜூனில் தேவகோட்டையில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரிடம் ரூ.12.5 லட்சம் மோசடி.ஏப்.19ல் தேவகோட்டை ஐடி ஊழியரிடம் ரூ.12.24 லட்சம் மோசடி. காரைக்குடியில் ஏப்.8ஆம் தேதி சி.பி.ஐ., அதிகாரிபோல் வாட்ஸ் ஆப்பில் பேசி ரூ.6.80 லட்சம் மோசடி நடந்துள்ளது.ஆறு மாதத்தில் ரூ.2 கோடியே 80 லட்சம் வரை ஏமாற்றம் அடைந்துள்ளனர்.மக்களின் அதீத ஆசையும் அறியாமையும், போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. மாவட்ட மக்கள் சைபர் கிரைம் குற்றங்களை அறிந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.நிதி மோசடி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தொடர்பான மோசடி, ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக மோசடி, ஆன்லைன் பரிசு மோசடி குறித்து அனைத்து மக்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.பொதுமக்கள் சைபர் கிரைம் குறித்த ஆன்லைன் புகார் தொடர்பான ஹெல்ப்லைன் எண் 1930 மற்றும் இணையதளம் வாயிலாக புகார் தெரிவிக்க www.cybercrime.gov.inஎன்ற இணைதளத்தில் புகார் அளிக்கலாம்.அனைவரும் விழிப்புடன் இருந்தாலே ஆன்லைனில் ஏமாற்றும் மோசடி கும்பலில் இருந்து தப்பித்து விடலாம் என போலீசார் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை