சருகணி ஆற்றில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்டு ‛அரசு புறம்போக்கு நிலம் என மாற்றம் நீர், நில பாதுகாப்பு இயக்கம் வரவேற்பு
சிவகங்கை; சிவகங்கை அருகே பெருங்குடி, அலவாக்கோட்டை, ஒக்கூர் சருகணி ஆற்றில் ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்டு, அரசு புறம்போக்கு நிலம் என வகை மாற்றம் செய்தது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சிவகங்கை அருகே அலவாக்கோட்டை பெரிய கண்மாயில் இருந்து ஓடும் மழை நீரே 1919 ம் ஆண்டில் சருகணி ஆறு என மாற்றம் பெற்றது. அலவாக்கோட்டை கண்மாய் பெரியாறு பாசன பிரதான கால்வாயின் 48 வது மடையில் 12 வது பிரிவின் கடைசி மடை கண்மாய் ஆகும். சருகணி ஆறு சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் துவங்கி காளையார்கோவில், தேவகோட்டை தாலுகா வழியாக சென்று 63 கி.மீ., துாரமுள்ள ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்., மங்கலம் கண்மாயில் கலக்கிறது. இதற்கு இடைப்பட்ட துாரத்தில் 11 அணைக்கட்டுகள் உள்ளன. ஆற்றின் வழியே உள்ள 126 கண்மாய்கள் மூலம் 7,810 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. சருகணி ஆறு இம்மாவட்டத்தில் 42 கி.மீ., துாரம் வரை செல்கின்றன. காலப்போக்கில் இந்த ஆற்றை துார்வாராமல் விட்டதால், ஆக்கிரமிப்பு அதிகரித்து சருகணி ஆறு என்ற சுவடே இல்லாமல் போனது. இந்த ஆற்றை மீட்கும் முயற்சியாக நீர், நில பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கோரிக்கை வைத்தனர். சிவகங்கையின் முந்தைய கலெக்டர் ஆஷா அஜித் முயற்சியால், சருகணி ஆறு துார்வாரும் பணி துவக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சருகணி ஆற்றில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி தலைமையில் தாசில்தார், நில அளவையர் ஆகியோருடன் நிலங்களை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றினர். தற்போது ஆக்கிரமிப்பில் இருந்த நில பட்டாக்களை ரத்து செய்து, அனைத்து நிலங்களையும் சருகணி ஆற்றிற்கான அரசு புறம்போக்கு நிலம் என பட்டாவில் வகை மாற்றம் செய்துள்ளனர். நீர் நில பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன் கூறியதாவது: இப்பகுதி விவசாயிகளின் முயற்சியால், சருகணி ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சீரமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆற்றை துார்வாரியும், தடுப்பணைகளை பராமரித்தும் பாசன பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இது போன்று மாவட்ட அளவில் வைகை, மணிமுத்தாறு, விருசுழியாறு உட்பட அனைத்து ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீராதாரங்களை பாதுகாக்க வேண்டும், என்றார்.