மாணவர்களுக்கு மதிய உணவுசீருடை வேண்டுமா... வேண்டாமா... பெற்றோரிடம் விபரம் சேகரிப்பு
சிவகங்கை:தமிழக அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு, சீருடை வேண்டுமா என பெற்றோரிடம் கல்வித்துறை ஒப்புதல் கடிதம் பெற்று வருகிறது.தமிழகத்தில் அரசு நகராட்சி, மாநகராட்சி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் நல பள்ளிகள் என அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி சத்துணவு மையங்கள் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதுதவிர ஆண்டு தோறும் பள்ளி சீருடைகளும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் சத்துணவு ஒப்புதல் கடிதம் பெற்று, அரசின் கவனத்திற்கு கொண்டு வருமாறு கல்வித்துறை இயக்குனர் அந்தந்த முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அக்., 18க்குள் சத்துணவு பட்டியல்: கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சத்துணவு ஒப்புதல் படிவத்தில் பள்ளி பெயர், நகரம், மாவட்டம், மாணவர், பெற்றோர் பெயர், எமிஸ் எண் இடம் பெற்றுள்ளது. அந்த விண்ணப்பத்தில் மாணவர்களின் பெற்றோரிடம் மதிய உணவு தேவையா, இல்லையா. மதிய உணவு வேண்டாம் எனில், கடந்த ஆண்டு சத்துணவு சாப்பிட்டீர்களா, சீருடை தேவையா என்பது போன்ற விபரங்களை அந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். பின் அதை அப்படியே 'ஸ்கேன்' செய்து 'எமிஸ்' இணையதளத்தில் அக்., 18 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளோம் என்றார்.