மூடப்பட்டு வரும் வெல்லம் தயாரிப்பு தொழில்கள் புத்துயிர் பெறுமா? போதிய விலையின்றி ஆலை தொழிலாளர்கள் அவதி
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் வெல்லம் தயாரிக்கும் கிரஷர் தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என கரும்பு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்து 500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. திருப்புவனம், கலியாந்தூர், அகரம், மழவராயனேந்தல், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் கிரஷர் வைத்து விவசாயிகள், அச்சு வெல்லம், பெரிய வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரித்து வருகின்றனர். இங்கு விற்கப்படுவதோடு மதுரை மார்க்கெட்டிற்கும் அனுப்பி வருகின்றனர். பொங்கல் சீசன் சமயத்தில் வெல்லத்திற்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் பலரும் இணைந்து கிரஷர் அமைத்து வெல்லம் தயாரித்து வந்தனர். ஏக்கருக்கு 40 முதல் 50 டன் கரும்புகள் வரை விளையும், அதனை வெட்டி ஆலையில் இட்டு பிழிந்து சாறு எடுத்து இரும்பு கொப்பரையில் காய்ச்சி வெல்லம் தயாரிக்கின்றனர். கரும்பை பிழிந்து கிடைக்கும் சக்கையை காய வைத்து எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். ஐந்து பேர் கொண்ட குழு தினமும் 4 முதல் 5 கொப்பரைகளில் காய்ச்சி வெல்லம் எடுக்கின்றனர். ஒரு கொப்பரைக்கு 100கிலோ வெல்லம் வரை கிடைக்கும். தற்போது 10கிலோ எடை கொண்ட ஒரு மூடை வெல்லம் ரூ.1800க்கு விற்கப்படுகிறது. இதனால் போதிய லாபம் கிடைப்பதில்லை. கிரஷர் அமைக்க மின்வாரியத்திடம் தற்காலிக அனுமதி பெற வேண்டும். அதன்பின் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூலி தொழிலாளர்களை வரவழைத்து வெல்லம் காய்ச்ச வேண்டும். வெல்லம் காய்ச்சினாலும் போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் வெல்லம் தயாரிக்காமல் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பி விடுகின்றனர். இதனால் வெல்லம் தயாரிக்கும் கிரஷர் தொழிலே காணாமல் போய் விட்டது. கிரஷர் இல்லாததால் வெல்லம் தேவைக்கு மதுரை மார்க்கெட்டை நம்பியே உள்ளனர். உள்ளூரில் தயாரிப்பு இருந்த போது தரமான வெல்லம், சர்க்கரை கிடைத்து வந்தது. கிரஷர் இல்லாததால் வெல்லத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கரும்பு அரவை இயந்திரத்தை இயக்க மின்சாரம் தேவை. இதற்காக மின்வாரியத்திடம் தற்காலிக இணைப்பு பெற்று இயந்திரம் மூலம் கரும்பை பிழிந்து சாறு எடுத்து வெல்லம் தயாரிப்பார்கள். வெல்லம் காய்ச்சும் கொப்பரைக்கு கரும்பு சக்கையை எரிபொருளாக பயன்படுத்துவதால் செலவு அதிகமாக இருப்பதில்லை. மின் இணைப்பு உடனுக்குடன் வழங்குதல், கொப்பரை வாங்க மானனியம் உள்ளிட்டவைகள் கிடைத்தால் அதிகளவில் விவசாயிகள் வெல்லம் காய்ச்சும் தொழிலில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் வெல்லம் உற்பத்தி அதிகரித்து, விலை குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. கரும்பு சாகுபடி பரப்பும் அதிகரிக்கும். வெல்லம் ஆலைக்கு சிக்கல் இது குறித்து இத்தொழில் ஈடுபட்டு வந்த வேலாயுதம் கூறியதாவது, வெல்லத்தின் விலை சீராக இருப்பதில்லை. 10கிலோ எடை கொண்ட ஒரு மூடை வெல்லம் ௧800 ரூபாய் என விற்கப்படுகிறது. செலவு அதிகரித்துள்ள நிலையில் போதிய விலை கிடைப்பதில்லை. குறைந்த பரப்பளவில் மட்டுமே கரும்பு பயிரிட்டுள்ளதால் இதற்காக கிரஷர் இயக்க முடியாது. மற்ற விவசாயிகள் ஆதரவு இருந்தால் தான் கிரஷர் தொழில் நடத்த முடியும். பெரும்பாலான விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை பதிவு செய்துள்ளதால் வெல்லம் தயாரிக்க முன்வரவில்லை என்றார்.