உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிடப்பில் கல்லல் யூனியன் பிரிப்பு திட்டம்; மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறுமா

கிடப்பில் கல்லல் யூனியன் பிரிப்பு திட்டம்; மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறுமா

திருப்புத்துார் : கல்லல் ஊராட்சி ஒன்றியத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கும் திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாக உள்ளது கல்லல். இந்த ஒன்றியத்தைச் சுற்றிலும் சாக்கோட்டை, தேவகோட்டை, திருப்புத்துார், காளையார்கோயில், கண்ணங்குடி, புதுக்கோட்டை மாவட்ட திருமயம் ஒன்றியங்களை எல்லையாக கொண்டுள்ளது. கல்லலை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த ஒன்றியம் 44 ஊராட்சிகளுடன் 40 கி.மீ. அகலத்தில் பரவியுள்ளது. இதன் பெரும்பான்மையான கிராமங்கள் திருப்புத்துார் மற்றும் சிவகங்கை தொகுதிகளில் உள்ளது.இந்த ஒன்றியத்தின் தலைமையிடமான கல்லலிருந்து நீண்ட துாரங்களில் பல கிராமங்கள் உள்ளதாலும், அலுவலர்கள் பற்றாக்குறையாலும் ஒன்றிய அலுவலகத்தினர் நிர்வாகம் செய்வதில் சிரமம் உள்ளது. இங்கு திட்டப்பணிகளுக்காக அரசு கேட்கும் அறிக்கைகளை முழுமையான தகவல்களுடன் விரைவாக உரிய நேரத்தில் தரமுடியாத நிலை நீண்ட காலமாக காணப்படுகிறது.அனைத்து கிராமங்களுக்கும் சமமான முறையில் ஒன்றிய நிதிகளை ஒதுக்க முடிவதில்லை. அது போல அடிப்படை வசதிகள் சமமாக பராமரிப்பதும் சிரமமாக உள்ளது. குறிப்பாக தொலை துார எல்லைக் கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக அரண்மனைப்பட்டி ஊராட்சி, ந.வைரவன்பட்டி ஊராட்சி கிராம மக்கள் காரைக்குடி அல்லது திருப்புத்தூர் சென்று இரு பஸ் மாறி கல்லல் ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.இந்த ஒன்றியத்திற்குள் காளையார்கோவில் ஒன்றிய கொட்டகுடி, திருப்புத்துார் ஒன்றிய கருங்குளம் ஊராட்சி மக்களும் வேறு ஒன்றியம் என்பதால் அலுவலர்களிடம் கோரிக்கைகளை தெரிவிக்க தூரங்களிலுள்ள நகர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களுக்கு எளிதாக அலுவலரை அணுக வசதியாக ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கான பரிந்துரையும் அலுவலகத்திலிருந்து அரசுக்கு 1989 முதல் பல முறை சென்றுள்ளது.இந்த ஒன்றியத்தை 22 ஊராட்சிகள் வீதம் வடக்கு, தெற்கு பகுதிகளை இரண்டாக பிரிக்க நிர்வாகத்தரப்பில் முன்பு ஆலோசிக்கப்பட்டது.ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. 44 ஊராட்சிகளுடன் இருந்த ஒன்றியத்தில் கோவிலூர், தளக்காவூர் ஆகிய ஊராட்சிகள் காரைக்குடி மாநககராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது.ஒன்றியத்தை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் மக்கள் அலைவது குறையும், மேலும் அலுவலர்களின் நேரடிக்கவனத்தில் கிராமங்கள் வரும். முக்கியமாக அரசின் நிதி ஒதுக்கீடும் இரண்டு மடங்காக அதிகரிப்பதால் கூடுதல் வளர்ச்சிப் பணிகள் இக்கிராமங்களில் நடைபெறும். இதனால் வடக்கு மற்றும் தெற்கு என்று இரண்டாக யூனியன் பிரிப்பை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை