துார்வாரப்படாத நாட்டார் கண்மாய் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுமா
காரைக்குடி: காரைக்குடியில் விவசாய மற்றும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் நாட்டார் கண்மாயை, துார்வாரி விவசாயத்தை காக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடி செஞ்சையில் உள்ள நாட்டார் கண்மாய் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 5 மடை கொண்ட இக்கண்மாயை நம்பி 350 ஏக்கர் வரை விவசாயம் நடந்தது. பாதரக்குடி, பேயன்பட்டி, சிறுவயல், கோவிலூர் பகுதியிலிருந்து மழைநீர் வரத்து கால்வாய் மூலம் இக்கண்மாயை வந்தடையும்.இந்த கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரை கருவேல மரங்கள்வளர்ந்து விவசாயம் பாதிப்படைந்துள்ளது. தவிர சாக்கடையும் கண்மாயில் கலந்து நீர் ஆதாரமும் வீணாகி வருகிறது. கண்மாய் மடைகள் முற்றிலும் கருவேல மரங்கள் சூழ்ந்து உள்ளே செல்ல முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள கண்மாயை தூர்வார விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.