திருப்புத்துார் பெரிய கண்மாய் கொள்ளளவை எட்டுமா; நிலத்தடி நீர் பெருக பாதுகாப்பது அவசியம்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் தற்போது அம்ருத் 2.0 குடிநீர்த் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. ஜன. க்குள் பணிகள் முழுமையடைந்து குடிநீர் வினியோகம் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது . நீராதாரத்தை மேம்படுத்த திட்டம் இல்லை இத்திட்டத்திற்கு காவிரி நீர் ஆதாரத்துடன் உள்ளூர் நீர் ஆதாரமாக ஆழ்குழாய் கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் பெரியகண்மாய் மற்றும் பாசன கால்வாய் பகுதிகளில் இந்த ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர்த்திட்டத்திற்கு உள்ளூர் நீர் ஆதாரம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஆனால் நிலத்தடிநீர் ஆதாரத்தை மேம்படுத்த விரிவாக திட்டமிடல் இல்லை. நகரிலுள்ள நீர்நிலைகளில் மழைநீர் சேகரிப்பு முக்கியமானதாகி விட்டது. திருப்புத்துாரில் முக்கிய வாய்ப்பாக பெரியகண்மாய் உள்ளது. குறைந்தது பாசனம் முன்பு 1200 ஏக்கர் ஆயக்கட்டை கொண்ட இக் கண்மாய் தற்போது 100 ஏக்கர் ஆயக்கட்டுக் கூட இல்லாமல் உள்ளது. இக்கண்மாய் பராமரிப்பு பெயரளவில் மட்டுமே நடைபெறுகிறது இக் கண்மாயில் நீர் சேகரிப்பிலும் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இக்கண்மாய்க்கு பாலாறு, விருசுழியாறுகளில் நீர் வரத்து இருக்கும். பல நுாற்றாண்டுகளாக பாலாறு நீர் வரத்தே இக்கண்மாய்க்கு முதன்மையானதாக இருந்தது. தற்போது பாலாற்றில் தண்ணீர் வருவதில்லை. கடந்த 50 ஆண்டுகளில் கட்டப்பட்ட பல அணைக்கட்டுகள், தடுப்பு அணைகளால் முற்றிலுமாக நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 2014க்கு பின் பத்து ஆண்டுகளாக பாலாறு நீர் பெரியகண்மாயை எட்டவில்லை. இதனால் கண்மாயும் பெருகவில்லை. துார்வாராத கண்மாய் இந்நிலையில் 2022 ல் விருசுழியாற்று நீர் வரத்து மூலம் கண்மாய் பெருகியது.ஆனால் முழுக் கொள்ளளவில் சேமிக்கப்படவில்லை. காரணம் கண்மாய் துார்வாரப்படாததும், முட்மரங்கள் நிறைந்துள்ளதும், கலுங்கில் கதவு இல்லாததுமே. இக்கண்மாயில் 10 அடி உயரம் வரை, 74.3 மில்லியன் கன அடி வரை நீர் தேக்க முடியும். நீர் கொள்ளளவை மேலும் அதிகரிக்கும் வகையில் முன்பு பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டனர். ரூ 2 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் கரையை 3 அடி உயர்த்தவும், ஆழத்தை மேலும் அதிகரிக்கவும், கரைகளை வலுப்படுத்தி கான்கிரிட் தளமாக மாற்றி, அதில் சாலை போக்குவரத்தை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. பெரியகண்மாயில் 11 மாதத்திற்கு தண்ணீரை தேக்கி நகரின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி அனுமதி இல்லாமல் கைவிடப்பட்டது. அருகிலுள்ள குடியிருப்புகள் பாதிக்காத வண்ணம் கண்மாய் ஆழப்படுத்தி நீர்த் தேக்கமாக்கவும், கூடுதல் நீர்வரத்திற்கு பெரியாறு விஸ்தரிப்பு வாய்க்கால் இணைப்பை மீண்டும் செயல்படுத்த வேண்டியதும் அவசியமாகும். பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 'பாலாற்றில் நீர் வரத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்திலும், விருசுழியாற்றில் நீர் வரத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்திலும் நல்ல மழை பொழிவு வேண்டும். ஆனால் சில ஆண்டுகளாக இந்த மாவட்டங்களிலும் மழை குறைவாகவே உள்ளது. தற்போது பெய்துள்ள மழையில் மணிமுத்தாறில் மட்டும் நீர்வரத்து காணப்படுகிறது. மதுரையில் மழை தொடர்ந்தால் உப்பாறு மூலம் மணிமுத்தாறில் நீர்வரத்து அதிகரிக்கும். நீர்த்தேக்கமாக மாற்ற நடவடிக்கை ஏதுமில்லை' என்றனர். குடிநீர் திட்டத்திற்கான நிலத்தடிநீர் செறிவிற்கும், திருப்புத்துாரில் உள்ள பல குளங்களுக்கு நீர் வரத்திற்கும், அதிகரிக்கும் குடியிருப்புக்களில் உள்ள ஆழ்குழாய்களில் பெறப்படும் நீரில் உப்புச்சத்து குறைவதற்கும் பெரியகண்மாயில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பது அவசியமானது. இதனால் பாசன வசதிக்கு அல்லாமல் நிலத்தடிநீர் தேவையை கருத்தில் கொண்டு திருப்புத்துார் பெரியகண்மாயில் முழுமையாக மரங்களை அகற்றி முழுமையாக பராமரித்து மேம்படுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.