மறக்கப்படும் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்குமா
மானாமதுரை: மானாமதுரை மார்க்கத்தில் அகல ரயில் பாதை அமைப்பதற்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையில் மதுரை - ராமேஸ்வரம், கோவை - -ராமேஸ்வரம், பாலக்காடு--ராமேஸ்வரம், கொல்லம் -நாகூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டன. அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பின் சில ரயில்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மன்னார்குடியிலிருந்து மானாமதுரை வரை இயக்கப்பட்ட ரயிலும் தற்போது காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. முன்பு இயக்கப்பட்ட இந்த ரயில்களில் சிவகங்கை,விருதுநகர்,ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பயணிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வர மிகவும் உதவியாக இருந்தது. மேலும் பகல் நேரங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டதாலும் ஏராளமான வியாபாரிகளும் பயனடைந்து வந்தனர். ரயில் பயணிகள் கூறியதாவது; முக்கியத்துவம் வாய்ந்த மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் தற்போது மிகவும் மோசமான நிலையில் செயல்பட்டு வருகிறது. ரயில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். மானாமதுரையை விட சிறிய ரயில்வே ஸ்டேஷன்களில் கூட ஏராளமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இதுவரை எவ்வித பணிகளும் நடைபெறாமல் உள்ளது. பயணிகளின் நலன் கருதி மானாமதுரை வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்கவும், ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்கவும் தென்னக ரயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.