உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கடைகளில் பொருட்கள் ஸ்டாக் இல்லை கடையை பூட்டி செல்லும் விற்பனையாளர்  ஏமாற்றத்துடன் திரும்பும் பெண்கள்  

கடைகளில் பொருட்கள் ஸ்டாக் இல்லை கடையை பூட்டி செல்லும் விற்பனையாளர்  ஏமாற்றத்துடன் திரும்பும் பெண்கள்  

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு உரிய நேரத்தில் இந்த மாதத்திற்கான அரிசி, பருப்பு, சர்க்கரை வராததால் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகிக்க முடியாமல் விற்பனையாளர்கள் கடையை பூட்டி செல்கின்றனர்.மாவட்ட அளவில் கூட்டுறவு, நுகர்பொருள் வாணிப கழகம், மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதன் கீழ் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்க அரசு புழுங்கல், பச்சரிசி 7,160 டன், சர்க்கரை 569 டன், கோதுமை 237 டன், துவரம்பருப்பு 3 லட்சத்து 11 ஆயிரத்து 805 கிலோ, பாமாயில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 491 பாக்கெட்கள் வரை ஒதுக்கீடு செய்கின்றன. நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ஒவ்வொரு மாதத்திற்கான பொருட்களை, முந்தைய மாத கடைசியில் கொஞ்சமாகவும், அடுத்த கட்டமாக அந்தந்த மாதத்தின் முதல் 18 நாட்களுக்குள் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன். தற்போது மாவட்ட அளவில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொருட்கள் இன்றி, விற்பனையாளர்கள் சரக்கு இல்லை எனக்கூறி கடைகளை பூட்டி செல்கின்றனர். மாதத்தின் தொடக்கத்திலேயே ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லாததால், கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடைகளில் தடையின்றி அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்களை கிடைக்க செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரேஷன் கடைக்கு வினியோகம்

நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத் கூறியதாவது, ரேஷன் கடைகளுக்கு இது (டிச., 10) வரை 4,795 டன் அரிசி, 367 டன் சர்க்கரை, 130 டன் கோதுமை, 2 லட்சத்து 734 கிலோ துவரம் பருப்பு, 2 லட்சத்து 16 ஆயிரத்து 330 பாக்கெட் பாமாயில் வினியோகம் செய்துவிட்டோம். அனைத்து பொருட்களும் தேவைக்கு மேல் கையிருப்பு உள்ளது. அடுத்த கட்ட நகர்வாக ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் ஒரு சில நாட்களில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !