உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிடப்பில் சரணாலய மேம்பாடு நிதி ஒதுக்கியும் பணி மந்தம்

கிடப்பில் சரணாலய மேம்பாடு நிதி ஒதுக்கியும் பணி மந்தம்

எஸ்.எஸ்.கோட்டை: திருப்புத்துார் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டும் மேம்பாடு பணிகள் மந்தமாக உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.திருப்புத்துாரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் 15 கி.மீ. துாரத்தில் உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். கொள்ளுகுடி, சின்னகொள்ளுகுடி, வேட்டங்குடி ஆகிய 3 கண்மாய்களில் பறவைகள் வந்து தங்கின. தற்போது கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் மட்டும் பறவைகள் வந்து கூடுகட்டி இன விருத்தி செய்கின்றன. வழக்கமாக ஆகஸ்டில் வந்து கோடையில் சென்று விடும்.கண்மாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நீர் இருப்பை பொறுத்து அவை இங்கு தங்கும் காலத்தை நீட்டிக்கின்றன. சரணாலயம் அருகில் சென்னை -கன்னியாகுமரி தொழிற்வழித்தட ரோடு செல்கிறது. அதை மேம்படுத்தும்போது சரணாலய மேம்பாட்டிற்காக ரூ 9.34 கோடி நிதி அனுமதியானது.ஆனால் பல மாதங்களாகியும் சரணாலய மேம்பாடு நடைபெறவில்லை.மேலக்கண்மாயிலிருந்து கொள்ளுக்குடிப்பட்டி கண்மாய்க்கு வரத்துக்கால்வாய் மட்டும் பெயரளவில் துார் வாரப்பட்டது. நீண்டகாலமாக கோரப்படும் கொள்ளுக்குடிப்பட்டிக் கண்மாய் மடை, கலுங்கு சீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை.சிதிலமடைந்த சிறுவர் பூங்கா புனரமைக்கப்படவில்லை. பார்வையாளர் மாடத்தை மறைக்கும் கருவை மரங்கள் அகற்றப்படவில்லை. மதுரை ரோட்டிலிருந்து சரணாலய ரோட்டிற்கு வரும் ரோடும் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதுப்பிக்கப்படவில்லை. கண்மாய் நீரில் பறவைகள் எச்சம் கலப்பதால் பொதுமக்கள் குளிக்கவோ, குடிக்கவோ பயன்படுத்த முடியாது. அதற்கு மாற்றாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிட்டும், கிராமத்தினருக்கும், பார்வையாளருக்கும்அதற்கான வசதி ஏற்படுத்தப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் 22 ஆயிரம் பறவைகள் வரை வலசை போதலாக வந்த இக்கண்மாய்க்கு தற்போது சில ஆயிரம் பறவைகளே வருகின்றன.வனத்துறையினர் சரியான திட்டமிடலில் சரணாலயத்திற்கான நிதியை பயன்படுத்த இயற்கை ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.தற்போதைய திட்டப்பணிகள் குறித்து அறிவிப்பு பலகையை சரணாலயத்தில் நிறுவவேண்டியதும் அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ