உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயிற்சி டாக்டர்கள் மீது தாக்குதல் கண்டித்து பணி புறக்கணிப்பு

பயிற்சி டாக்டர்கள் மீது தாக்குதல் கண்டித்து பணி புறக்கணிப்பு

சிவகங்கை,:சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி டாக்டர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்மருத்துவமனையில் செப்., 28 அதிகாலை12:00 மணிக்கு பயிற்சி டாக்டர்கள் கருணா 23, சாதிக் 23, விஷ்ணு தினேஷ் 23, ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது சிவகங்கை நேரு பஜாரைச் சேர்ந்த பாலமுருகன் 26, டூவீலர் விபத்தில் காயத்துடன் சிகிச்சைக்கு சென்றார். இப்பயிற்சி டாக்டர் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். நரம்பியல் நிபுணர் விடுமுறையில் இருந்ததால் பாலமுருகனுக்கு எடுக்கப்பட்ட சி.டி., ஸ்கேன் அறிக்கையை நரம்பியல் டாக்டருக்கு அலைபேசியில் அனுப்பி சந்தேகம் கேட்டுள்ளனர். அப்போது பாலமுருகனுடன் இருந்த உறவினர்கள் பயிற்சி டாக்டர்களிடம் ஸ்கேன் அறிக்கையை வழங்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் பயிற்சி டாக்டர்களை கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதுகுறித்து டீன் சீனிவாசன் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தகராறில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத 5 பேரில் சூர்யா 27 என்பவரை மட்டும் கைது செய்தனர். சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் போலீசார் மற்றவர்களை கைது செய்யவில்லை. இதையடுத்து அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி நேற்று பயிற்சி டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் டீன், கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா, டி.எஸ்.பி., பிரதீப், தாசில்தார் மல்லிகார்ஜூனா பேச்சு வார்த்தை நடத்தினர். இரு நாட்களுக்குள் தாக்கிய அனைவரையும் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை கை விட்ட னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை